சுகாதாரத்துறை இணை இயக்குநர் எச்சரிக்கை: பூந்தமல்லி கோரன்டைன் வார்டில் 55 பேர் அனுமதி: வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை சந்திக்க வேண்டாம்: கார் அல்லது 108 ஆம்புலன்சில் அனுப்பி வைப்பு

சென்னை: விமானத்தில் சென்னைக்கு வந்த 55 பேர் பூந்தமல்லி கோரன்டைன் வார்ட்டில் தங்க வைக்கப்பட்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்துக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அவர்களை அருகில் உள்ள கோரன்டைன் முகாமிற்கு அழைத்துச் சென்று தனிமைப்படுத்தி, பல்வேறு சோதனைகளை நடத்துகின்றனர். இந்நிலையில் கொரோனா பீதி காரணமாக நேற்று 55 பயணிகள் டென்மார்க், ஸ்வீடன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் வேலை மற்றும் சுற்றுலாவுக்காக சென்றுவிட்டு சென்ைன வந்துள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த இவர்களை  பூந்தமல்லியில் உள்ள கோரன்டைன் வார்டுக்கு அழைத்து செல்லப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பூந்தமல்லி கோரன்டைன் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சைகள், மற்றும் பரிசோதனைகளை சுகாதாரத் துறை இணை இயக்குநர் சம்பத்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சீனா, ஈரான், இத்தாலி, கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் அங்கு சுற்றுலா, வேலை மற்றும் படிப்பு சம்பந்தமாக சென்றவர்கள் பலர் கொரோனா அச்சத்தால் தாயகம் திரும்பி வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர்களை நேரடியாக பூந்தமல்லியில் உள்ள பொது சுகாதார நிறுவனத்திற்கு அழைத்து வந்து தனியாக உள்ள அறைகளில் தங்க வைக்கப்பட்டு 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு எந்தவித நோய் தொற்றும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு அவர்களின்  சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். பரிசோதனை முடிந்து நேற்று 18 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் ஆஸ்துமா, ரத்த கொதிப்பு உள்ளவர்கள் தொடர்ந்து 14 நாட்கள் இங்கு தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள்.

அதன் பிறகு பாதிப்பு இருக்குமானால் உரிய பாதுகாப்புடன் சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இல்லை என்றால் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். வெளி நாட்டில் இருந்து வருபவர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு அதன் பிறகு அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை உறவினர்கள், நண்பர்கள் யாரும் 15 நாட்களுக்கு பார்க்கவோ சந்திக்கவோ வேண்டாம். அவர்கள் பார்க்க வந்தாலும் அனுமதிக்க வேண்டாம் என அவர் தெரிவித்தார். பூந்தமல்லி அரசு பொது சுகாதார நிறுவன துணை இயக்குநர்  பிரபாகரன் கூறியதாவது: கடந்த 15ம் தேதி பூந்தமல்லி அரசு பொது சுகாதார நிறுவனத்தில் கோரன்டைன் வார்டு திறக்கப்பட்டது.

இங்கு 100 பேர் வரை தங்கி பரிசோதனை செய்யும் அளவுக்கு வசதி உள்ளது. வெளிநாடுகளிலிருந்து வந்த 55 பேர் இதுவரை இங்கு மருத்துவர்களின் தீவர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தனி கட்டிடத்தில் தற்போது 2 தளங்களில் தனித்தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஏ, பி, சி, என்று 3 நிலைகளில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  24 மணி நேரமும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதால் யாரும் சந்திக்க அனுமதியில்லை.

இந்நிலையில், 24 மணி நேர கண்காணிப்பில் இருந்த 18 பேர் நேற்று அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுக்கு கொரோனா தொற்று ஏதும் இல்லை. இருப்பினும் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அந்தப் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களால் கண்காணிக்கப்படுவார்கள். இது குறித்து அந்தந்த பகுதி அரசு மருத்துவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பரிசோதனை முடிந்து இங்கிருந்து வீடுகளுக்கு செல்பவர்கள் அவர்களது சொந்த வாகனங்களில் செல்லலாம். அல்லது 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்படுவார்கள். பூந்தமல்லி கோரன்டைன் வார்டு அனைத்து வசதிகளுடன் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: