கொரோனா பரவல் எதிரொலி: ரயில்நிலைய பிளாட்பார்ம் டிக்கெட் 50 ஆக உயர்வு: கூட்டநெரிசலை கட்டுப்படுத்த அதிரடி

சென்னை: கொரோனா பரவல் எதிரொலியாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்டநெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நடைமேடை ரயில் டிக்கெட் கட்டணம் 10ல் இருந்து 50 ஆக உயர்ந்துள்ளது. சென்னை  சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தினசரி 30க்கும் மேற்பட்ட ரயில்கள்  வடமாநிலங்களுக்கும், தமிழகத்தில் கோவை, ஈரோடு, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இயக்கப்படுகிறது. மேலும் இங்கு ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தங்களது உறவினர்களை வழியனுப்புவதற்காக ரயில் நிலையத்துக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் போது அவர்கள் நடைமேடை (பிளாட்பார்ம்) டிக்கெட் எடுத்து செல்வது உண்டு. தற்போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையிலும் கூட்டம் அதிகளவில் கூடுவதை தடுக்கவும் ரயில்வே அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அதன்படி ரயில்வே பிளாட்பார்ம் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளித்துள்ளது.

ஏற்கனவே ரயில்வே வாரியம் கடந்த 2015 மார்ச் மாதம் நடைமேடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் நடைமேடை டிக்கெட் விலையை உயர்த்தலாம் என்று அனைத்து ரயில்வே மண்டலத்திலும் உள்ள கோட்டங்களுக்கு அதிகாரத்தை வழங்கியது. இதனால் 2015ம் ஆண்டில் இருந்து அனைத்து ரயில் நிலையங்களிலும் 5 ரூபாயில் இருந்த நடைமேடை டிக்கெட் விலை 10 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது தெற்கு ரயில்வே, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மட்டும் நடைமேடை டிக்கெட் விலையை 3 மாதங்களுக்கு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதாவது கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 30ம் தேதி வரை 3 மாதங்களுக்கு நடைமேடை டிக்கெட் விலை உயர்த்தப்படுகிறது. அதாவது கொரோனா வைரஸ் காரணமாக ரயில்நிலையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முதல் வரும் 31ம் தேதி வரை 10 இருந்த பிளாட்பார டிக்கெட் விலை 50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: