ஆவடி, அம்பத்தூர் பகுதியில் சிடிஎச் சாலையில் வாகன ஆக்கிரமிப்பு: விபத்தில் சிக்கும் பொது மக்கள்

ஆவடி: சென்னையில் இருந்து திருப்பதிக்கு சி.டி.எச் நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலை வழியாகத்தான்  சென்னை, புறநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதியில் உள்ள பொறியியல், கலை கல்லூரிக்கும் சென்று வர வேண்டும். இதன் காரணமாக இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில், அம்பத்தூர், ஆவடி பகுதியில் சிடிஎச் சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது; ஆவடி, அம்பத்தூர் பகுதியில் சி.டி.எச் சாலையில்  காலை, மாலை நேரங்களில் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பாடி முதல் திருநின்றவூர் வரை பல இடங்களில் சாலை ஆக்கிரமிக்கப்பட்டதால் மிகவும் குறுகலாக உள்ளது. பஸ் ஸ்டாப், முக்கிய சந்திப்புகளில் ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதாலும் ஆவடி பகுதியில் அமரர் ஊர்திகள் நிறுத்துவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் நடக்கிறது. இதுதவிர, ஆவடி சி.டி.எச் சாலையில் உள்ள தனியார் இரும்பு பைப் தயாரிக்கும் நிறுவனம் முன்பு சரக்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும் கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக, சி.டி.எச் சாலையில் வரும் அரசு, தனியார் பேருந்துகள், கார்கள், ஆட்டோக்கள் மோதி இரு சக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

உயிரிழப்புகளும் நடைபெறுகிறது. இது குறித்து, போக்குவரத்து போலீசாருக்கு பலமுறை புகார்கள் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சிய போக்குடன் உள்ளனர் என்றனர்.

Related Stories: