வடமதுரை ஊராட்சியில் மக்களை மிரட்டும் குடிநீர் தொட்டி

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம்  அருகே எல்லாபுரம் ஒன்றியம் வடமதுரை  ஊராட்சிக்கு உட்பட்ட செங்காத்தா குளம், பேட்டை மேடு, ஏரிக்குப்பம் மற்றும் வடமதுரை காலனியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 30 வருடத்துக்கு முன்பு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 குடிநீர் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டது. தற்போது குடிநீர் தொட்டியின் தூண்களின் சிமெண்ட் சிலாப்புகள் உடைந்து கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு நிற்கிறது.

இந்த தொட்டிகள் அருகே அரசு பள்ளி, அங்கன்வாடி மையம் உள்ளதால் இங்கு படிக்கும் மக்களுக்கு ஆபத்துக்கு வாய்ப்புள்ளது. எனவே, இந்த 4 குடிநீர் தொட்டிகளையும் அகற்றி  புதிய குடிநீர் தொட்டிகள்  கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இருப்பினும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: வடமதுரை காலனி, பேட்டை மேடு, செங்காத்தா குளம், ஏரிக்குப்பம் பகுதியில் உள்ள பழைய குடிநீர் தொட்டிகள் பழுதடைந்து இடியும் நிலையில் உள்ளது.

இதனருகே பள்ளிக்கூடம், அங்கன்வாடி மையம், குடியிருப்பு உள்ளதால் குழந்தைகள், மக்களுக்கு ஆபத்துக்கு வாய்ப்புள்ளது. புதிய குடிநீர் தொட்டி கட்டவேண்டும் என்று பிடிஓ அலுவலகத்திலும் மனு கொடுத்துள்ளோம். எனவே, இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Related Stories: