கொரோனா வைரஸ் எச்சரிக்கை எதிரொலி: தூத்துக்குடியில் சூப்பர் மார்க்கெட் கடைகளில் அலைமோதிய கூட்டம்

தூத்துக்குடி: கொரோனா வைரஸ் எச்சரிக்கை எதிரொலியாக தூத்துக்குடியில் சூப்பர் மார்க்கெட், பலசரக்கு கடைகளில் நேற்றிரவு மக்கள் கூட்டம் அலைமோதியது. நள்ளிரவு வரை கடைகளை திறந்து வைத்து சரக்குகளை வியாபாரிகள் விற்றனர்.

கொரோனா வைரஸ் சீனாவில் வூகான் மாகாணத்தில் தொடங்கி தற்போது உலகம் முழுவதும் உயிர்க்கொல்லி நோயாக பரவி வருகிறது. இந்த நோயை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்கள், அனைத்து சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், கேளிக்கை அரங்குகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவை வரும் 31ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தூத்துக்குடியில் ஜின் பாக்டரி ரோட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் மூடப்படுமோ என அச்சப்பட்டனர்.

இதனால் பொதுமக்கள் இரவு 9 மணி அளவில் அந்த மார்க்கெட்டில் பலசரக்கு மற்றும் காய்கறி, பழ விற்பனை பிரிவுகளில் குவிந்தனர். இதுபோல் ஆங்காங்கே இருந்த பலசரக்கு, காய்கறி கடைகளிலும், காமராஜர் காய்கனி மார்க்கெட்டிலும் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் நள்ளிரவு வரை கடைகளை திறந்து வைத்து வியாபாரிகள் பொருட்களை விற்றனர். கொரோனா விழிப்புணர்வு எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடியில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, விளாத்திகுளம், திருச்செந்தூர், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் ஆகிய ஊர்களில் மொத்தம் உள்ள 18 தியேட்டர்கள் அனைத்தும் இன்று முதல்  மூடப்பட்டன. ஏற்கனவே புதுப்படம் திரையிட்டால் தான் கூட்டம் வரும் என்ற நிலையில், தற்போது 15 நாட்கள் தியேட்டர்களை மூட அரசு உத்தரவிட்டதால், ஊழியர்களுக்கு எப்படி சம்பளம் கொடுப்பது என்று உரிமையாளர்கள் திகைப்படைந்துள்ளனர்.

குறைந்தது சிக்கன் விலை

சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் ஒரு கிலோ சிக்கன் விலை ரூ.180க்கு விற்றது. சீனாவில் கொரோனா மற்றும் கேரளாவில் பறவை காய்ச்சல் பரவியதன் எதிரொலியாக ரூ.140 ஆக குறைந்தது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் சிக்கன் விலை கிலோ ரூ.65க்கு சரிந்து விட்டது. விலை குறைந்தாலும் வாங்குவதற்கு ஆள் இல்லாமல் சிக்கன் தாராளமாய் கிடைக்கிறது.

‘மாஸ்க்’ தட்டுப்பாடு

தூத்துக்குடியில் உள்ள மெடிக்கல் ஸ்டோர் மற்றும் ஷாப் களில் மாஸ்க்குகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் கைகளை துடைக்கப் பயன்படுத்தும் டிஷ்யூ பேப்பர், லிக்குவிட், மவுத்வாஷ், டெட்டால் உள்ளிட்ட கிருமி நாசினி பொருட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மாஸ்க் இருக்கும் கடைகளிலும் ரூ.20க்கு விற்க வேண்டியவை, ரூ.30க்கும், ஒரு மாதம் பயன்படுத்தக் கூடிய மாஸ்க் ரூ.300 லிருந்து 400 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

ஆள் அரவம் இல்லாத படகு குழாம்

தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் உள்ள படகு குழாம் இன்று ஆள் அரவமற்று கிடக்கிறது. இந்த சாலையில் அதிகாலையில் எப்போதும் நடைபயிற்சிக்கு சாரை, சாரையாக மக்கள் செல்வது வழக்கம். ஆனால் இன்று சொற்ப அளவிலேயே பொதுமக்கள் நடைபயிற்சி சென்றனர்.

Related Stories: