இன்று கால்நடை பராமரிப்பு துறை மானிய கோரிக்கை: திருவள்ளூர் அரசு கால்நடை மருத்துவமனையின் அவலம்

* 6 ஆண்டுகளாக துருப்பிடித்து வீணாகும்    ‘அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ் ரே

* அறுவை சிகிச்சை மருத்துவர் பணியிடம் காலி n பல கோடி ரூபாய் அரசு பணம் அம்போ

சென்னை: திருவள்ளூர் மாவட்ட கால்நடை அரசு மருத்துவமனையில், கால்நடைகளை தாக்கும் நோய்களை துல்லியமாக கண்டறியக்கூடிய ‘’அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ் - ரே’’ வசதி இருந்தும், அதற்கான அறுவை சிகிச்சை மருத்துவர் இல்லாததால், அவை 6 ஆண்டுகளாக காட்சிப் பொருளாக பயனற்று கிடக்கிறது. காலி பணியிடங்களை நிரப்பி அதை பயனுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், 5 கால்நடை மருத்துவமனைகள், 83 கால்நடை மருந்தகங்கள், 25 கிளை நிலையம் செயல்படுகிறது. திருவள்ளூர் ஜெ.என்.சாலையில் மாவட்ட கால்நடை தலைமை அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு நகரின் பல்வேறு பகுதிகள், மணவாளநகர், காக்களூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து, ஆடு, மாடு, நாய், கோழி, பூனை போன்ற கால்நடை மற்றும் செல்லப்பிராணிகளை சிகிச்சைக்காக கொண்டு வருகின்றனர்.

கால்நடைகளுக்கு, மேம்படுத்தப்பட்ட சிகிச்சையை அளிக்கும் வகையில், நோய்களை துல்லியமாக கண்டறியும், ‘’அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்’’ இந்த அரசு கால்நடை மருத்துவமனையில் 1 கோடி மதிப்பீட்டில், கடந்த 2014ம் ஆண்டு அமைக்கப்பட்டு உள்ளது.

இதன்மூலம்,  கால்நடைகள் மற்றும் செல்லப் பிராணிகள் புண், வயிற்றுப்போக்கு, உடல் இழைப்பு போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறலாம். மேலும், எலும்பு முறிவு ஏற்பட்டால், அதை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வசதியாக ‘’எக்ஸ் - ரே’’ வசதியும் செய்யப்பட்டு உள்ளது.மேலும், நோயின் தன்மையை கண்டறிந்து அதற்கேற்ப, ஊசி, மருந்து வழங்கப்பட்டு சிகிச்சையளிக்கலாம். கால்நடைகளின் நோய், சினை உள்ளிட்டவற்றை துல்லியமாக கண்டறியலாம். அதோடு, கம்பி, ஆணி என தேவையில்லாத பொருட்களை கால்நடைகள் முழுங்கி விட்டு, சிரமப்படும் பட்சத்தில், துல்லியமாக அந்த பொருள் எங்கிருக்கிறது, என கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம்.

ஆனால், ஸ்கேன் மையம், எக்ஸ் - ரே அமைத்து 6 ஆண்டுகளுக்கு மேலாகியும், அதற்கான அறுவை சிகிச்சை மருத்துவர், கால்நடை உதவியாளர்கள் என ஊழியர்கள் யாரும் நியமனம் செய்யப்படவில்லை. இதனால், ஸ்கேன்’’ மையம், எக்ஸ் - ரே மையம் ஆகியவை பயன்பாடின்றியும், துருப்பிடித்து காட்சிப் பொருளாகவும் உள்ளது. இதனால் அரசு பணமும் பல கோடி வீணாகியுள்ளது. மேலும், கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கு ஊசி போடும் இடத்தை தினமும் சுத்தம் செய்யாததால் அப்பகுதி நாறி வருகிறது. அதோடு மருத்துவ கழிவுகளையும் அங்கேயே கொட்டி வைத்துள்ளதால் மேலும் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இம்மருத்துவமனையில் மருத்துவர்கள் உட்பட மொத்தம் 12 பணியிடங்கள் உள்ளன. இதில், 9 பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது 3 ஊழியர்கள் மட்டுமே கால்நடைகளுக்கும், ஆடு, கோழி,  நாய் போன்ற செல்ல பிராணிகளுக்கும் சிகிச்சை அளித்து வருகின்றனர். எனவே, விவசாயிகளின் கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க வசதியாக, திருவள்ளூர் அரசு தலைமை கால்நடை மருத்துவமனையில் உள்ள ‘’அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ் - ரே’’ மையத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

‘’1962’’ அவசர ஆம்புலன்ஸ் இங்கே...! டிரைவர், உதவியாளர்கள் எங்கே...?

திருவள்ளூர் மாவட்டத்திற்கு, அதிநவீன வசதிகளை உள்ளடக்கி, ஒரு கால்நடை இலவச ஆம்புலன்ஸ் வாகனம், கடந்த நான்கு நாட்களுக்கு முன் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில், கால்நடைகள் சிகிச்சைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள், நவீன கருவிகள், ரத்தம், சிறுநீர் மூலம் நோய் கண்டறியும் சிறிய அளவிலான லேப் வசதி உள்ளது. தவிர, ஆம்புலன்ஸ் செல்ல முடியாத இடங்களில் இருந்து கால்நடைகளை எடுத்து வரும் வகையில் நவீன தள்ளுவண்டி; உயர் சிகிச்சைக்காக கால்நடைகளை கொண்டு வரும் வகையில் ‘’ஹைட்ராலிக் லிப்ட், இரவு நேரங்களில் சிகிச்சை அளிக்க வசதியாக அதிக ஒளி உள்ள மின் விளக்குகளுடன் ஜெனரேட்டர், யு.பி.எஸ்., வசதியுடன் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது  ஆனால், இதற்கென டிரைவர், மருத்துவர் மற்றும் உதவியாளர்கள் பணியிடம் நிரப்பப்படவில்லை. இதனால், இந்த அவசர வாகனமும், அவசரத்துக்கு உதவாத நிலையில் உள்ளது. இதே நிலை நீடித்தால், இந்த வாகனமும் விரைவில் காட்சி பொருளாக மாறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: