கொரோனா பீதி முக்கிய வழக்குகளை மட்டும் விசாரிக்க வேண்டும் தலைமை நீதிபதியிடம் வக்கீல் சங்கங்கள் கோரிக்கை: இன்று முடிவு எடுப்பதாக ஐகோர்ட் தகவல்

சென்னை: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் முக்கிய வழக்குகளை மட்டுமே விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று வக்கீல்கள் சங்கங்கள் தலைமை நீதிபதியிடம் முறையிட்டன. இது குறித்து இன்று முடிவு வெளிவரும் என்று கூறப்படுகிறது.   சீனாவில் உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி சுமார் 5 ஆயிரம் உயிர்களை பலிவாங்கியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, வக்கீல்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றான நீதிமன்றங்களிலும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளதாக வக்கீல்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் பரவாமலிருக்க அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 இதன் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்திலும் முக்கிய வழக்குகளை மட்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியை சந்தித்து, அட்வகேட் ஜெனரல் விஜய்  நாராயண்,  சென்னை உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன், சென்னை பார் அசோசியேஷன் தலைவர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் முறையிட்டனர்.இது குறித்து விவாதித்து முடிவு எடுப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார்.  இதற்கிடையில், உயர் நீதிமன்ற வளாகத்தில் குறிப்பாக குடும்பநல நீதிமன்றங்கள், சிட்டி சிவில் நீதிமன்றங்களில் அளவுக்கு அதிகமாக மக்கள் கூடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வக்கீல்கள் முஸ்தஹீன் ராஜா, முகில் துமிலன் ஆகியோரும் உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன், காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், தனது நீதிமன்ற அறைக்கு வரவேண்டாம் என்று வேண்டுகோள்விடுத்து நீதிமன்ற அறைக்கு வெளியில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி ஏபி சாஹி மற்றும் உயர் நீதிமன்றத்தின் 8 மூத்த நீதிபதிகள்,  அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத் துறை செயலாளர் பியூலா ராஜேஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் குழந்தை சாமி உள்ளிட்ட அரசு அதிகாரிகளை நேற்று நீதிமன்றத்திற்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் எடுத்த முடிவுகள் குறித்து இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் முக்கிய வழக்குகளை விசாரணைக்கு எடுப்பது குறித்து விவாதிப்பதற்காக தலைமை நீதிபதி நேற்று இரவு மதுரை சென்றார். அனைத்து தரப்பு ஆலோசனைகளையும் கேட்ட பிறகு உயர் நீதிமன்றம் கொரோனா விஷயத்தில் இன்று முடிவு அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.

தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை:

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க உயர் நீதிமன்றத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், விமான நிலையத்தில் உள்ளதுபோல தெர்மல் ஸ்கேனர் கொண்டு  நீதிமன்றத்துக்குள் செல்பவர்களை பரிசோதிக்கவும், மருத்துவ பரிசோதனை குழுக்களை நியமிக்கவும் தலைமை நீதிபதி ஆலோசித்துள்ளார். இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் செயல்படும் வக்கீல்கள் சங்கங்கள் மற்றும் கேன்டீன் ஆகியவற்றை நாளை முதல் மார்ச் 31 வரை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வக்கீல் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories: