கொரோனா முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்: மாநிலம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் 10 ஆயிரம் ஊழியர்கள்: சென்னையில் 3 இடங்களில் சிறப்பு முகாம்

சென்னை: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் உள்ளாட்சி மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் 10 ஆயிரம் பேர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக பொதுமக்கள் ஒன்றாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி சென்னையில் பல்வேறு இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தி.நகர், அடையாறு, சின்னமலை உள்ளிட்ட அனைத்து மாநகர போக்குவரத்து கழக பணிமனைகளில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அடங்கிய குழு கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். பேருந்து புறப்படுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாக ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபடுகின்றனர். இதற்கு அடுத்தபடியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மசூதி, கோயில் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. குறிப்பாக ஏடிஎம் மையங்கள், பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட இடங்களிலும் இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதைத்தவிர்த்து சென்னை மாநகராட்சியில் மாநகர நல அலுவலர் ஜெகதீசன் தலைமையில் கோயம்பேடு,  சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் 20 பேர் அடங்கிய சென்னை மாநகராட்சி  மருத்துவ குழுக்கள் செயல்பட்டுவருகிறது.

இதில் வெளிமாநிலங்களில் இருந்து  வரும் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னை தவிர்த்து மற்ற மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளித்தல் மற்றும் பிளீச்சிங் பவுடர் தூவும் பணியை தினசரி மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் குழந்தைசாமி கூறியதாவது: தமிழகம் முழுவதும் பேருந்து, ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் தினசரி கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த பணியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக ஆம்னி பஸ்களில் பேருந்து புறப்படுவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாக கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் தொடர்ந்து அனைத்து நாட்களிலும் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: