டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி: செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் தேர்வுகளில் பலர் இடைத்தரகர்கள் மூலம் பணம் கொடுத்து, முறைகேடாக தேர்ச்சி பெற்றதாக புகார் எழுந்தது. அதன்படி சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து, அரசு அலுவலகங்களில் வேலை செய்து வருபவர்கள், இடைத்தரகர்கள் என பலரை கைது செய்து வருகின்றனர். அதில் முக்கியமாக, கடந்த 2017ம் ஆண்டு நடத்தப்பட்ட குருப்2 ஏ தேர்வில் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில்  பலர் தேர்வாகியதாக புகார் எழுந்தது.அதன்படி ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று சாந்தோம் பதிவுத்துறை ஐஜி அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வந்த பூர்ணிமாதேவி, தலைமை செயலகத்தில் உள்ள உள்துறை அலுவலகத்தில் வேலை செய்து வந்த வேலூரை சேர்ந்த விக்னேஷ்  ஆகியோர் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற இடைத்தரகர் நாராயணன் என்பவருக்கு ரூ.21 லட்சம் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து, பூர்ணிமா தேவி, விக்னேஷ் மற்றும் இடைத்தரகர் நாராயணன் ஆகியோரை கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி 3 பேரும் சென்னை, முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.இந்த மனு நீதிபதி செல்வகுமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில், விசாரணை ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால், ஜாமீன் வழங்க கூடாது என வாதிடப்பட்டது. இதனைதொடர்ந்து நீதிபதி, அரசு ஊழியர்களான பூர்ணிமா தேவி, விக்னேஷ் மற்றும் இடைத்தரகர் நாராயணன் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: