கொரோனாவால் அண்டை மாநிலங்கள் பாதிப்பு எதிரொலி மாநில எல்லைகளுக்கு சீல்வைப்பு: தலைமை செயலாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

சென்னை: கொரோனாவால் அண்டை மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திற்குள் வைரஸ் காய்ச்சல் ஊடுருவாமல் தடுப்பதற்காக மாநில எல்லைகளுக்கு சீல் வைக்க தலைமைச் செயலாளர் தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.  அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்தநிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், உள்ளாட்சித்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், வீட்டு வசதித்துறை செயலாளர் ராஜேஷ் லகானி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, அண்டை மாநிலங்களில் இருந்து கொரோனா பாதிப்புடன் நோயாளிகள் வரக்கூடாது என்பதற்காக மாநில எல்லைகளை சீல் வைத்து சோதனை நடத்திய பிறகே உள்ளே அனுமதிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை உடனடியாக அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியை போல தமிழகத்தில் கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை உடனடியாக அரசு பொது மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்காமல் கொரன்டைன் பிளாக் ஒன்றை உடனடியாக உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வளாகத்தை நகருக்கு வெளியே உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக உடனடியாக இடம் தேர்வு செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது. பொதுமக்கள் கூடும் வர்த்தக வளாகங்கள், தியேட்டர்களிலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க விழிப்புணர்வை உருவாக்க முடிவு எடுக்கப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் அனைத்து துறை அதிகாரிகளும் போர்க்கால அடிப்படையில் உஷாராக இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சினிமா தியேட்டர்கள் வெறிச்

தமிழகத்தில் தற்போது கொரோனா பீதி அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் அதிக அளவில் பீதி உருவாகியுள்ளது. இதனால் சினிமா தியேட்டர்கள், வர்த்தக வளாகங்களில், நட்சத்திர ஓட்டல்களில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் கூட்டம் வெகுவாக குறைந்து விட்டது. பல தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

Related Stories: