கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி; உச்சநீதிமன்றத்தின் முக்கியமான வழக்குகளை விசாரிக்கும் அமர்வு மட்டுமே செயல்படும் என அறிவிப்பு

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தின் முக்கியமான வழக்குகளை விசாரிக்கும் அமர்வு மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உச்சநீதிமன்ற நிர்வாகம் அறிவித்துள்ளது. கூட்டம் கூடுவதை தவிர்க்க மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியதை அடுத்து உச்சநீதிமன்றம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

64 இந்தியர்கள், 16 இத்தாலியர்கள், கனடாவைச் சேர்ந்த ஒருவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். உலகளாவிய தொற்று நோய் என ஐநா.வால் அறிவிக்கப்பட்டுள்ள கோவிட்-19 கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் திரையரங்குள் மூடப்படுவதாக பல்வேறு மாநிலங்கள் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் பள்ளிகள், திரையரங்குகள் மூட உத்தரவு

கொரோனா பாதிப்பால் திருமணம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகளை ஒரு வாரத்திற்கு மூடி வைக்கவும் முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். மேலும் கர்நாடகாவில் அனைத்து விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

பீகாரில் பள்ளி, கல்லூரிகள் மூடல்

பீகார் மாநிலத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிலையங்களை மார்ச் 31-ம் தேதி வரை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கான தொகை அவர்களது பெற்றோர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் பள்ளிகளும் மார்ச் 31 வரை மூட உத்தரவு

கொரோனா வைரஸ் காரணமாக உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்தியபிரதேசத்தில் பள்ளிகள் மூடல்

கொரோனா அச்சம் காரணமாக மத்திய பிரதேச மாநிலத்தில் காலவரம்பின்றி பள்ளிகள் மூடப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

Related Stories: