அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்; பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகளை மூட மாநில அரசுகள் உத்தரவு

பெங்களூரு: உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியுள்ள கொரோனா வைரஸ், மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஆபத்தான தொற்று நோய் என உலக சுகாதார அமைப்பும் அறிவித்துள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் திரையரங்குள் மூடப்படுவதாக பல்வேறு மாநிலங்கள் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் பள்ளிகள், திரையரங்குகள் மூட உத்தரவு

கொரோனா பாதிப்பால் திருமணம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகளை ஒரு வாரத்திற்கு மூடி வைக்கவும் முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். மேலும் கர்நாடகாவில் அனைத்து விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

பீகாரில் பள்ளி, கல்லூரிகள் மூடல்

பீகார் மாநிலத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிலையங்களை மார்ச் 31-ம் தேதி வரை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கான தொகை அவர்களது பெற்றோர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் பள்ளிகளும் மார்ச் 31 வரை மூட உத்தரவு

கொரோனா வைரஸ் காரணமாக உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்தியபிரதேசத்தில் பள்ளிகள் மூடல்

கொரோனா அச்சம் காரணமாக மத்திய பிரதேச மாநிலத்தில் காலவரம்பின்றி பள்ளிகள் மூடப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

Related Stories: