ஜப்பானில் ஜூலை 24ல் தொடங்கும் ஒலிம்பிக் போட்டியை ஓராண்டுக்கு ஒத்திவைக்கலாம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஜப்பானின் டோக்கியோவில் ஜூலை 24ல் தொடங்கும் ஒலிம்பிக் போட்டியை ஓராண்டுக்கு ஒத்திவைக்கலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். சீனாவின் வூகானில் கடந்த டிசம்பரில், கோவிட்-19 எனும் கொரோனா வைரஸ் பரவியது. உயிர் பலி வாங்கி வரும் இந்த வைரஸ், சீனா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதனிடையே, ஜப்பானின் டோக்கியோவில், ஜூலை 24 முதல் ஆகஸ்டு 9 வரை ஒலிம்பிக் நடக்க உள்ளது. கொரோனா பரவலால், இது நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், ஒலிம்பிக் பிறந்த இடமான கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் நேற்று பாரம்பரிய முறைப்படி கிரீஸ் நடிகை ஸாந்தி ஜியார்ஜிவ் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார்.

கொரோனா பீதி காரணமாக இந்த நிகழ்ச்சியை காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், கொரோனா வைரஸ் ஒரு பக்கம் மிரட்டினாலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை திட்டமிட்டபடி ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் நடத்துவது என்று போட்டி அமைப்பாளர்கள் உறுதியாக உள்ளனர். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியை ஓராண்டு தள்ளிவைக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் யோசனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய அவர், இப்படி சொல்வது தர்ம சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் இன்றி நடத்தப்படுவதை காட்டிலும் தள்ளிவைப்பதே சிறந்தது, என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, அயர்லாந்து பிரதமர் உடனான சந்திப்பின் போது கை குலுக்காமல் வணக்கம் சொன்னது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், கை குலுக்காமல் இந்திய முறையில் வணக்கம் சொல்வது எளிதாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Related Stories: