என்பிஆர் கணக்கெடுப்பு பணி நிறுத்திவைப்பு: தமிழக அரசு திடீர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று திடீரென அறிவித்துள்ளார். இதுகுறித்து வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 2003ல் என்பிஆர் சட்டம் மத்திய அரசால் இயற்றப்பட்டது. 2010ல் இந்தியா முழுவதும் என்பிஆர் சட்டத்தை முதல் முதலாக அமல்படுத்தினர். இப்போது என்பிஆர் குறித்து பல்வேறு விவாதங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. 2020ம் ஆண்டு கணக்கெடுப்பில் 3 புதிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளது. புதிதாக சேர்க்கப்பட்ட 3 அம்சங்கள் மீது சிறுபான்மையினர், இஸ்லாமியர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பல்வேறு தடைகள் உள்ளது.

மத்திய அரசு 3 அம்சங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்று, தமிழக முதல்வர் விளக்கம் கேட்டுள்ளார். இந்த கடிதத்திற்கான பதில் இதுவரை கிடைக்கவில்லை. அதனால், என்பிஆர் கணக்கெடுக்கும் பணி தமிழகத்தில் தற்போது வரை தொடங்கப்படவில்லை.

மத்திய அரசு இயற்றிய ஒரு சட்டத்தை, ரத்து செய்ய மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. எதிர்க்கட்சி தலைவருக்கும் நன்றாக தெரியும். என்பிஆர் கணக்கெடுப்பின்போது எந்த ஆவணங்களும் சமர்ப்பிக்க அவசியமில்லை. கணக்கெடுப்பின்போது தனிநபர், என்ன தகவல் கொடுக்கிறோரோ அதை அலுவலர்கள் அப்படியே பதிவு செய்து கொள்வார்கள். சென்செஸ் ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை எடுத்து வருகிறோம். இதன் அடிப்படையில்தான் நிதி ஒதுக்கீடு செய்வது, திட்டங்களை செயல்படுத்துவது, எதிர்கால திட்டங்களை வகுப்பது, புதிய திட்டங்களுக்கான அடிப்படை ஆதாரமாக எடுத்துக்கொள்ளதான் ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

என்பிஆர் கணக்கெடுப்பு, ஒரு மதத்திற்கு மட்டும் சார்ந்தது அல்ல. அனைத்து பிரிவினருக்கும், சாதியினருக்கும், மதத்தினருக்கும் எடுக்கப்படுகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு ஒரே மாதிரியான படிவங்களை தான் வழங்குவார்கள். புதிதாக இணைக்கப்பட்ட 3 அம்சங்களும் இடம் பெற்றிருக்கும். அதாவது, தாய்மொழி, தந்தை-தாயார், துணைவியார் விவரம், பிறந்த இடம், பிறந்த தேதி, ஆதார், கைப்பேசி எண், வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவை கேட்கப்படும். 2010ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்புபடிதான் 2020ம் ஆண்டும் எடுக்கப்படுகிறது என்று மக்களை நாங்கள் ஏமாற்ற விரும்பவில்லை. 100 சதவீதம் சிறுபான்மையினருக்கு அதிமுக அரசு பாதுகாப்பாக இருக்கும். மாநில அரசு பணி கணக்கெடுத்து மத்திய அரசுக்கு அனுப்பும் பணியை மட்டும்தான் செய்யும். என்பிஆர் கணக்கெடுப்பு பணி நடைபெறாது. ஆசிரியர்கள் மூலம் ஜூன் 14 முதல் ஜூலை 30 வரை 45 நாட்கள் முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும்.

இந்த கணக்கெடுப்பின்போது குடும்ப உறுப்பினர்கள் விவரம், வீட்டு வசதிகள் குறித்து மட்டுமே கணக்கெடுக்கப்படும். 2010ல் நடந்த கணக்கெடுப்புபடிதான் 2020ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. என்பிஆர் பற்றி எந்த அறிவிப்பும் தமிழகத்தில் தற்போது வெளியிடப்படவில்லை. மத்திய அரசிடம் இருந்து பதில் வந்த பிறகுதான் அதுபற்றி அறிவிக்கப்படும். அதுவரை அந்த பணி தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: