திட்டச் செலவு வசூலான சாலைகளிலுள்ள சுங்கச்சாவடிகளை மூட உத்தரவிடக்கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: திட்டச் செலவுகள் வசூலான சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை மூட உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. திருச்சியை சேர்ந்த தங்கவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 74 தேசிய சாலைகளுக்கான திட்டச் செலவு முழுவதும் வசூலிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 62 சுங்கச் சாவடிகளை மூடி விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சாலைகளை அமைத்தற்கான முதலீட்டு தொகைகள் முழுவதும் வசூலிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்த சாலைகளை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தி வருகிறார்கள்.  மாநில சாலைகளாக உள்ள 600 கிலோ மீட்டர் சாலையை ரூ.100 கோடி மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகளிடம் மீண்டும் கட்டணம் வசூலிக்கும் நிலை ஏற்படும். ஏற்கனவே, சாலைகள் கட்டமைப்பிற்காக ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலிலும் ரூ.9 கூடுதல் வசூலிக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணமாக கடந்த 2018-2019ம் நிதியாண்டில் ஒரு லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அரசுக்கு ரூ.6784.49 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் வகையில் கட்டணம் வசூலிக்காத வகையில் சாலை கட்டமைப்புக்காக செலவிடப்பட்ட தொகை வசூலான சாலைகளில் சுங்க சாவடிகளை மூடுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: