காவல் நிலையம் எதிரே நிறுத்தி இருந்த ரோந்து வாகனம் எரிந்து நாசம்: தண்டையார்பேட்டையில் பரபரப்பு

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை காவல்நிலையம் எதிரே நிறுத்தி வைத்திருந்த போலீஸ் ரோந்து வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தண்டையார்பேட்டை - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மணிக்கூண்டு அருகே தண்டையார்பேட்டை காவல் நிலையம் உள்ளது. இங்கு, குற்றப்பிரிவு, மகளிர் காவல் நிலையம், உதவி ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள போலீசார் இரவில் ரோந்து சென்றுவிட்டு, அதிகாலையில் ரோந்து வாகனத்தை காவல் நிலையம் எதிரே நிறுத்தி வைப்பது வழக்கம்.

அதன்படி, நேற்று காலை காவல் நிலையம் எதிரே நிறுத்தி வைத்திருந்த ரோந்து வாகனத்தில் இருந்து புகை வெளியேறி, சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்து, அப்பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். போலீசார் இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தண்டையார்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து விரைந்து வந்த வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் ரோந்து வாகனம் முற்றிலும் எரிந்து சேதமானது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோந்து வாகனத்திற்கு சமூகவிரோதிகள் யாரேனும் தீவைத்தார்களா? அல்லது மெட்ரோ ரயில் பணியின்போது தீப்பொறி விழுந்து தீப்பிடித்ததா? அல்லது வாகனத்தின் பேட்டரியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். காவல்நிலையம் எதிரே ரோந்து வாகனம் தீப்பற்றி எரிந்த சம்பவம் தண்டையார்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: