திவால் மற்றும் நொடித்துப் போதல் சட்ட திருத்த மசோதா 2 அவைகளிலும் நிறைவேற்றம்

புதுடெல்லி: திவால் மற்றும் நொடிப்பு நிலை சட்ட திருத்த மசோதா இன்று மாநிலங்களவையில் குரல் வாக்கு மூலம்  நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு கடந்த 6ம் தேதி நிறைவேற்றப்பட்டது. 2 அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதை அடுத்து குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும்.

தொழில் நிறுவனங்கள் திவாலாகும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, அதில் உள்ள தடைகளை அகற்றும் வகையில் புதிய விதிமுறைகளுடன் திவால் மற்றும் நொடிப்புநிலை சட்ட திருத்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திவால் நிலையை சந்தித்த நிறுவனங்களை, ஏலத்தில் எடுத்து நடத்துபவர்கள், முந்தைய நிறுவனங்கள் செய்த குற்றத்துக்கான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடாத வகையில் இந்த சட்ட திருத்தம் பாதுகாப்பு அளிக்கும். இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. கடந்த 2016ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திவால் சட்டம் ஏற்கனவே 3 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் புதிய பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் இந்த சட்ட திருத்த மசோதாவை, மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். ஆனாலும் இதனை நிறைவேற்ற முடியவில்லை. இந்த மசோதா தொடர்பான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய நிர்மலா சீதாராமன், உலகில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களை கருத்தில் கொண்டும் நீதிமன்றங்கள், நடுவர் மன்றங்கள் போன்றவை சட்டத்திற்கு அளிக்கும் விளக்கங்கள் காரணமாகவும் புதிய சட்டத் திருத்தம் தேவைப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.  

Related Stories: