தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இடம் ராமேஸ்வரத்தில் அமையுமா கொரோனா சோதனை மையம்?

*வெளிமாநிலத்தோர் வருவதால் பரவும் அபாயம்

* பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் வலியுறுத்தல்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்துக்கு தமிழகம் உட்பட வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தினமும் வந்து செல்வதால், இங்கு கொரோனா பரிசோதனை மையம் ஏற்படுத்த வேண்டுமென பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். சீனாவை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பினால், சர்வதேச அளவில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பலருக்கும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நம் நாட்டில் அதிக ஜனத்தொகை கொண்டுள்ள பல பெரு நகரங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் மத்திய, மாநில அரசுகளால் எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா நோய் தாக்கம் அதிகரித்துள்ள நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளானவர்கள் கண்டறிப்பட்டு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, முக்கிய புண்ணியத்தலமான ராமேஸ்வரத்திற்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் அதிகளவில் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். சில வாரங்களுக்கு முன்பு, ராமேஸ்வரத்தை சுற்றிப்பார்க்க வந்த சீனாவை சேர்ந்த ஒரு பெண் மற்றும் ஒரு வாலிபரை, சுகாதாரத்துறை அதிகாரிகள் பிடித்து சோதனை செய்து அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பிய சம்பவம் நடந்தது. மேலும் கொரோனா நோய் தொற்றுக்கு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு நபர், ராமேஸ்வரம் உள்ளிட்ட பல இடங்களுக்கும் சமீபத்தில் ஆன்மிக சுற்றுலா சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

நாள்தோறும் அதிகளவில் பொதுமக்கள் வந்து செல்லும் இடமாக விளங்கி வரும் ராமேஸ்வரத்தில் வழக்கமான மலேரியா, மர்மக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவினாலே கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினரும், மருத்துவர்களும் திணறுவர். சாதாரண காய்ச்சலுக்கு மருத்துவம் பார்ப்பதற்கே பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஊர் ஊராக டாக்டர்களை தேடிச் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் அறிகுறியை கண்டுபிடிப்பதற்கான எவ்வித அடிப்படை வசதியும் ராமேஸ்வரம் போன்ற ஆன்மிக சுற்றுலாத்தலங்களில் இல்லை.

சமீபத்தில் கச்சத்தீவில் நடந்த அந்தோணியார் திருவிழாவில் இலங்கை மற்றும் தமிழகத்தை சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து கச்சத்தீவு சென்ற 2,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவிழா முடிந்து திரும்பும் போது ராமேஸ்வரம் துறைமுகத்தில் பெயரளவில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.  பக்தர்கள் ஒவ்வொருவரின் உடலிலும் கூடுதலான வெப்பநிலை குறித்து சோதனை செய்து மாத்திரைகள் வழங்கி அனுப்பி வைத்தனர்.

ஆனால் நாள்தோறும் வெளியூர்களில் இருந்து ரயில், பேருந்து மற்றும் சுற்றுலா வாகனங்களில் ராமேஸ்வரம் வந்து செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு இதுபோன்ற சோதனை செய்யப்படுவதில்லை. எனவே, ராமேஸ்வரத்தில் முக்கிய இடங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களை ஏற்படுத்த வேண்டும். சுற்றுலாப்பயணிகள், யாத்ரீகர்களை பரிசோதித்து அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் தேவையான மருத்துவ சோதனை மையங்களை உடன் ஏற்படுத்த அரசும், சுகாதாரத்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோயில் நிர்வாகம் அலட்சியப்படுத்தலாமா?

ராமேஸ்வரத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடுதிகளில் தங்கி, அக்னி தீர்த்தக்கடலில் குளித்து, பின் அனைத்து தீர்த்தங்களிலும் நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். கலாம் நினைவிடம் கட்டிய பிறகு ராமேஸ்வரம் வரும் கூட்டம் மேலும், அதிகரித்துள்ளது. பெருமளவில் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகளும் கூடும் இடமான ராமநாத சுவாமி கோயிலில் இதுநாள் வரை கொரோனா வைரஸ் தடுப்பு பரிசோதனை மையம் அமைக்கவோ, விழிப்புணர்வு நடவடிக்கைகளோ எடுக்கவில்லை.

தை மற்றும் ஆடி அமாவாசை போன்ற நாட்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தும் சுகாதாரத்துறையும் போதிய அக்கறை காட்டவில்லை. உள்ளூர்வாசிகளும், சுற்றுலாப்பயணிகளும், இங்குள்ள மருந்து கடைகளில் மாஸ்க் கேட்டாலும் தட்டுப்பாட்டால் கிடைப்பதும் இல்லை. இதுகுறித்து ராமேஸ்வரத்தில் மெடிக்கல் கடை நடத்தும் முரளி கூறுகையில், ‘‘பொதுமக்களும், வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளும் அதிகளவில் முகத்தில் அணியும் மாஸ்க், கையுறை மற்றும் டெட்டால் உள்ளிட்ட பொருட்களை கேட்கின்றனர். ஆனால் ரூ.10க்கு விற்பனை செய்யப்படும் மாஸ்க் ரூ.30க்கு கூட கிடைக்கவில்லை. கையுறைகளும் அதிகளவில் கிடைக்கவில்லை. கடுமையான தட்டுப்பாடு இருப்பதால் கேட்பவர்களுக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது’’ என்றார்.

கூட்டமா இருக்கா? டீ குடிக்க வரலை...

ராமேஸ்வரம், மார்க்கெட் தெரு டீக்கடை உரிமையாளர் வலம்புரி, ‘‘டீக்கடையில் நாள்தோறும் உள்ளூர்வாசிகள், சுற்றுலாப்பயணிகள் என நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இவர்களில் பலரும் கொரோனா நோய் நமக்கும் வந்துவிடுமோ என்ற அச்சத்துடனே டீக்குடித்து செல்கின்றனர். துணி கொண்டு முகத்தில் மாஸ்க் போல் கட்டி மறைத்து கொள்வது, கூட்டமாக இருக்கும்போது கடைக்கு வருவதை தவிர்ப்பது என கொரோனா பயத்துடனே அனைவரும் வந்து செல்கின்றனர்’’ என்றார்.

சோதனை மையம் அமைக்க சுகாதாரத்துறை களமிறங்குமா?

ராமேஸ்வரம் நுகர்வோர் இயக்க செயலாளர் களஞ்சியம் கூறுகையில், ‘‘இதுபோன்ற நேரங்களில் ராமேஸ்வரம் போன்ற அதிகளவில் வெளியூர் யாத்ரீகர்கள், சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் இடங்களில் அரசு சுகாதாரத்துறையினர், முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதுபோன்ற நடவடிக்கைள் எதுவும் இல்லை. ராமேஸ்வரத்தில் பொதுவாக மலேரியா, காலரா, மர்ம காய்ச்சல் என பல்வேறு நோய்கள் மக்களை அவ்வப்போது பாதித்து வருகிறது. உலகத்தையை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ராமேஸ்வரம் பகுதியில் பல்வேறு இடங்களில் சோதனை மையங்களை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

ஓட்டல்களில் மாஸ்க் அணிந்து உணவு சப்ளை

ராமேஸ்வரம் உணவு விடுதி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் செந்தில்குமார் கூறுகையில், ‘‘உணவு விடுதிகள் அனைத்தையும் சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளோம். ஊழியர்கள் முகத்தில் மாஸ்க், தலையில் தொப்பி அணிந்து, உணவுகளை பரிமாறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். கைகழுவும் இடங்களில் மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் லோஷன், ஆயில் உள்ளிட்ட பொருட்களை, ஓட்டலுக்கு சாப்பிட வரும் சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வைத்துள்ளோம். அனைத்து ஓட்டல்களிலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள விழிப்புணர்வு ஏறபடுத்தி வருகிறோம்’’ என்றார்.

Related Stories: