புதையல் விவகாரத்தில் போலீசை சிக்க வைத்த பொக்லைன் டிரைவருக்கு ரூ.1 கோடி கிடைத்ததா? சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

கருங்கல்: கருங்கல் அருகே புதையல் விவகாரத்தில் போலீசை சிக்க வைத்த பொக்லைன் ஆபரேட்டருக்கு ரூ.1 கோடி கிடைத்ததாக அவரே கூறும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஜெர்லின் (24). பொக்லைன் ஆபரேட்டர். கடந்த வருடம் அக்டோபர் மாதம் இவரை ஒரு கும்பல், நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே ஒரு பங்களாவுக்கு கடத்தி சென்று தங்க புதையல் எங்கே என கேட்டு மிரட்டி, பல்வேறு பத்திரங்களில் கையெழுத்து வாங்கி, அவரது கார்களையும் பறித்தனர். அந்த கும்பலிடம் இருந்து தப்பிய ஜெர்லின், அப்போதைய குளச்சல் ஏ.எஸ்.பி. கார்த்திக்கிடம் புகார் கூறினார்.

விசாரணையில் இதன் பின்னணியில் கருங்கல் இன்ஸ்பெக்டராக இருந்த பொன்தேவி, எஸ்.எஸ்.ஐ. ரூபன், ஏட்டு ஜோன்ஸ் ஆகியோருக்கு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இவர்கள் 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நாகர்கோவிலை சேர்ந்த ஆசிரியர் சுரேஷ்குமார் மற்றும் ரவுடி கும்பலை சேர்ந்த 7பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். ஜெய ஸ்டாலின் தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில் புதையல் விவகாரம் தொடர்பாக தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில், ஒரு அறைக்குள் கட்டிலில் அமர்ந்து இருக்கும் ஜெர்லினை, யாரோ சிலர் மிரட்டுகிறார்கள்.

அவர்களின் மிரட்டலுக்கு பயந்து, கேமராவை பார்த்தவாறு பேசும் ஜெர்லின், எனக்கு ஒரு தங்க புதையல் கிடைத்தது. அதில் தங்க நகைகள் இருந்தன. நான் அதை  எனது முதலாளியிடம் கொடுத்தேன். அவர் எனக்கு ரூ.1 கோடி கொடுத்தார். அந்த பணத்தை கொண்டு சொகுசு கார்கள், 2 ஜேசிபி வாங்கினேன் என்று கூறுகிறார். சுமார் ஒன்றரை நிமிடம் இந்த வீடியோ ஓடுகிறது. கடந்த வாரம் குளச்சல் அருகே செம்மண் கடத்தியது தொடர்பாக ஜெர்லின் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவர் கைதான இரு நாட்களில் இந்த வீடியோ வைரலாகி இருக்கிறது.

கைதான ஜெர்லின் போலீசாரிடம், தனக்கு புதையல் கிடைத்த தகவலை ஒப்பு கொண்டார் என்று, இந்த வீடியோ தொடர்பாக  தகவல்கள் பரப்பப்படுகிறது. ஆனால் உண்மையில் இந்த வீடியோ கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஜெர்லின் கடத்தப்பட்டு ஒரு அறையில் வைக்கப்பட்டு அந்த கும்பலால் சித்ரவதை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ. இப்போது, அவர் கைதாகி உள்ள நேரத்தில் வெளியிட்டு வழக்கை திசை திருப்ப முயற்சி நடப்பதாக சந்தேகங்கள் எழுந்துள்ளது. இதை வெளியிட்டது யார் என்பது மர்மமாக உள்ளது.

Related Stories: