பண்ருட்டி காவல் நிலையத்தில் எஸ்ஐயுடன் மோதலில் ஈடுபட்ட பெண் இன்ஸ்பெக்டர்: வைரலான வீடியோவால் ஆயுதப்படைக்கு மாற்றம்

பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. இவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சசிகலா. குடும்ப சொத்து பிரச்னை காரணமாக பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சசிகலா புகார் கொடுத்தார். புகாரை பெற்ற இன்ஸ்பெக்டர் வனஜா நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த பிரபு, இன்ஸ்பெக்டர் வனஜாவிடம் செல்போனில் பேசி உள்ளார். இதையடுத்து அவர் சசிகலாவுக்கு போன் செய்து, உனது கணவர் எஸ்ஐஆக இருந்தால் அவருக்கு கொம்பா முளைத்திருக்கிறது? என்று திட்டினாராம்.

இந்நிலையில் பிரபு பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு நேரில் சென்று இன்ஸ்பெக்டர் வனஜாவிடம், எனது மனைவி கொடுத்த புகாரை ஏன் விசாரிக்கவில்லை என்று கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் எஸ்ஐயை கைது செய்து உட்கார வைத்துவிடுவேன் என இன்ஸ்பெக்டர் வனஜா மிரட்டினார். இதுபற்றிய வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்ஐ ஆகிய இருவரிடமும் பண்ருட்டி டிஎஸ்பி நாகராஜன் நேரில் விசாரித்து உள்ளார்.

மேலும் கடலூர் மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ் இருவரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்தினார். அவர் இந்த அறிக்கையை டிஐஜிக்கு அனுப்பினார். இதில் முதல்கட்டமாக இன்ஸ்பெக்டர் வனஜாவை ஆயுதப்படை பிரிவிற்கு டிஐஜி சந்தோஷ்குமார் மாற்றம் செய்து உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர், எஸ்ஐ வாக்குவாதம் வீடியோ காட்சிகள் காவல்நிலையத்தின் உட்புரத்தில் இருந்து எடுத்ததாக தெரியவருகிறது. இதை பெண் காவலர்கள் எடுத்தார்களா, வேறு யார் எடுத்து வெளியிட்டனர் என விசாரணை நடக்கிறது.

* வாலிபரை எட்டி உதைக்கும் பெண் இன்ஸ்பெக்டர்

தூத்துக்குடி பெரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள் (37). வீட்டு வேலை செய்து வருகிறார். கடந்த 7ம் தேதி வேலையில் ஈடுபட்டிருந்தவரை அவரது உறவினர் சங்கர் பார்க்க வந்துள்ளார். வீட்டு உரிமையாளரான பெண், தகாத வார்த்தைகளால் அவரை திட்டியதோடு காலால் எட்டி உதைத்துள்ளார். இது தொடர்பாக பதிவான வீடியோ காட்சிகள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இதனால் மனமுடைந்த மாரியம்மாள், நேற்று முன்தினம் இரவு தற்கொலைக்கு முயன்று, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே வீட்டில் வைத்திருந்த தங்க நகையை மாரியம்மாள் திருடி விட்டதாக தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் ராஜ் என்பவர் கடந்த 7ம் தேதி அளித்த புகாரின் பேரில், திருட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே பணிப்பெண் மாரியம்மாளை காண வந்த வாலிபரை எட்டி உதைப்பவர் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பணியாற்றும் ஒரு இன்ஸ்பெக்டர் எனவும், அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: