கொரோனா வைரஸ் எதிரொலி: சுகாதாரத்துறை சார்பில் சென்னை ஆயுதப்படை காவலர்களுக்கு விழிப்புணர்வு முகாம்!

சென்னை: கொரோனா வைரஸ் தொடர்பாக சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரக்கூடிய நிலையில், இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகின்றனர். தற்போது சென்னை காவல்துறையில் ஆயுதப்படை பிரிவில் முகாமானது நடைபெற்று வருகிறது. சென்னை காவல் தலைமையக கூடுதல் ஆணையர் ஜெயராமன் மற்றும் ஆயுதப்படை துணை ஆணையர் ரவிசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் விழிப்புணர்வு முகாமில் கலந்துகொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகள், காவல்துறையினருக்கு கொரோனா தொடர்பான விவரங்களை எடுத்துரைத்தனர். அதில் கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது, எவ்வாறு தற்காத்து கொள்வது என்பது குறித்த விளக்கங்களை அளித்து வருகின்றனர். காவல்துறையை பொறுத்தவரையில் இதில் குறிப்பாக ஆயுதப்படையினருக்கே முகாம் நடத்தப்படுகிறது.

சென்னையில் பொதுமக்கள் அதிகளவில் கூடக்கூடிய இடங்களில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளக்கூடிய வேலையில் ஆயுதப்படை காவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதுமட்டுமின்றி வாகனசோதனை, குடிபோதையில் வாகன ஓட்டிகளை கண்டறிவது போன்ற பணிகளையும் ஆயுதப்படை காவலர்களே பெரும்பாலும் செய்து வருகின்றனர். எனவே வாகன சோதனையின் போது பயன்படுத்தப்படும் கருவிகளை தவிர்க்கும்படியும் காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் வெளியிலிருந்து வீட்டிற்குள் வரும் போது கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை ஆயுதப்படை காவல்துறையினருக்கு, சுகாதாரத்துறை அதிகாரிகள் வழங்கி வருகின்றனர். இதுபோன்று காவல்துறையில் உள்ள ஒவ்வொரு பிரிவினருக்கும் விழிப்புணர்வு முகாம் ஏற்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: