கொரோனா வைரஸ் எதிரொலியாக என்.எல்.சி.யில் பயோமெட்ரிக் வருகை பதிவு திடீர் நிறுத்தம்

கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.யில் நேற்று மாலை முதல் பயோமெட்ரிக் முறை திடீரென்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய்க்கு உலகளவில் 3,800 பேர் பலியாகி உள்ளார்கள். சீனாவில் மட்டும் 3,120 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 45 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்திலும் ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கண்டறியபட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நோய் அறிகுறியுடன் இருப்பவர்கள் தனிமைபடுத்தப்பட்டு அவர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய- மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் அதிகாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள் என 25 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் பயோ மெட்ரிக் முறையிலான வருகை பதிவு செய்வதை வருகிற 31-ந்தேதி வரை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நெய்வேலி என்.எல்.சி.யின் நிலக்கரி சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள் உள்ளிட்ட தொழிலக பகுதிகள் மற்றும் அனைத்து அலுவலகங்களிலும் பணியாளர்கள், அவர்களின் வருகையை பதிவு செய்வதற்கு பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன்படி விரல் ரேகையை பதிவு செய்து வந்தனர்.

நேற்று மாலை முதல் பயோமெட்ரிக் முறை திடீரென்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை பணியாளர்கள் தங்களது அடையாள அட்டையை பயோமெட்ரிக் பஞ்சிங் எந்திரத்தின் எதிரே காட்டினால் போதும் என்று என்.எல்.சி. இந்தியா நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: