2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் திண்டிவனத்தில் திமுக வேட்பாளர் சீதாபதி வெற்றி பெற்றது செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் திண்டிவனத்தில் திமுக வேட்பாளர் சீதாபதி சொக்கலிங்கம் பெற்ற வெற்றி செல்லுபடியாகும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் சீதாபதி சொக்கலிங்கம் போட்டியிட்டார். இவரை எதிர்த்து, அதிமுக சார்பில் எஸ்.பி.ராஜேந்திரன் என்பவர் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 61,879 வாக்குகள் பெற்றிருந்த சீதாபதி 101 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், திமுக வேட்பாளர் சீதாபதியின் வெற்றியை எதிர்த்து அந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.பி.ராஜேந்திரன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்து அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், திமுக வேட்பாளர் சீதாபதி, வாக்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றதாகவும், தபால் வாக்குகளை எண்ணுவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். எனவே, சபாபதி வெற்றிபெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என எஸ்.பி.ராஜேந்திரன் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கானது உயர்நீதிமன்ற நீதிபதி பார்த்தசாரதி முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு எந்தவொரு ஆதாரமோ, சாட்சியோ இல்லை எனக்கூறி அதிமுக வேட்பாளர் எஸ்.பி.ராஜேந்திரனின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், 2016ம் ஆண்டு திண்டிவனத்தில் சீதாபதி சொக்கலிங்கம் பெற்ற வெற்றி செல்லும் எனவும் தீர்ப்பளித்துள்ளார்.

Related Stories: