உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் நடுவழியில் நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில்கள்: பயணிகள் அவதி

சென்னை: தேனாம்பேட்டை-சின்னமலை இடையே உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் மெட்ரோ ரயில் சேவை 2 மணி நேரம் பாதிக்கபட்டது. இதனால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சென்னையில் மொத்தம் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. இவை பச்சை மற்றும் நீலநிற வழித்தடங்கள் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் தண்டவாள பகுதியில் முறையான பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாததால் அடிக்கடி சேவைகளில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சிக்னல் கோளாறு, என்ஜின் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் அடிக்கடி ஏற்படுகிறது.

இந்தநிலையில், நேற்று மதியம் தேனாம்பேட்டை - சின்னமலை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே சென்ற உயரழுத்த மின்கம்பி திடீரென அறுந்து விழுந்தது. இதனால், ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதுகுறித்து தலைமை அலுவகத்திற்கு தகவல் தெரிவக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து, அறுந்து விழுந்த கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால், சென்ட்ரல் - விமானநிலைய வழித்தடத்தில் சுமார் 2 மணி நேரமாக ரயில்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. 20 நிமிடத்திற்கு ஒரு ரயில் என தாமதமாக இயக்கப்பட்டது.

குறிப்பாக, வண்ணாரப்பேட்டையில் இருந்து விமானநிலையம் செல்ல வேண்டிய பயணிகள் டி.எம்.எஸ் நிலையம் வரை ஒரு ரயிலிலும், பின்னர் டி.எம்.எஸ் இல் இருந்து ஆலந்தூர் வரையில் ஒரு ரயிலிலும் அங்கிருந்து விமான நிலையத்திற்கும் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. மெட்ரோ ரயில் வழித்தடங்களில் முறையான பராமரிப்பு பணியை மேற்கொள்ளாததே இதுபோன்ற பிரச்னைகள் தொடர்ந்து ஏற்படுவதற்கு காரணம் என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories: