பொதுப்பணித்துறையில் கடந்த நான்கு ஆண்டுகளாக புது கான்ட்ராக்டர் லைசென்ஸ் வழங்குவது நிறுத்தம்: பரபரப்பு தகவல்கள் அம்பலம்

சென்னை: தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக புதிய கான்ட்ராக்டர் லைசென்ஸ் தருவது நிறுத்தி வைத்து இருப்பதால் அரசுக்கு கூடுதல் இழப்பு ஏற்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.தமிழகத்தில் பொதுப்பணித்துறையில் கான்ட்ராக்டர்கள் உரிமம் தருவது, புதுப்பிப்பது உள்ளிட்டவை அந்தந்த மண்டல கண்காணிப்பு பொறியாளர்கள் மூலம் பெற முடியும். ஆனால், இந்த நடைமுறையை மாற்றம் செய்து, நீர்வளப்பிரிவு  முதன்மை தலைமை பொறியாளருக்கு அதிகாரம் கடந்த 2018ல் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கான்ட்ராக்டர்கள் உரிமம் புதுப்பிக்க முதன்மை தலைமை பொறியாளரை அணுக வேண்டிய நிலை கான்ட்ராக்டர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கான்ட்ராக்டர்கள் உரிமம் பெறுவது கடந்த 2016க்கு பிறகு முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கான்ட்ராக்டர்கள் உரிமம் பெற விண்ணப்பித்தவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. இதற்கு, டெண்டர் எடுப்பதற்கு போட்டி போடும் கான்ட்ராக்டர்கள் எண்ணிக்கை அதிகமாகி விடுவார்கள் என்பதற்காக முழுவதுமாக அதிகாரிகள் நிறுத்தி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதை பயன்படுத்தி கொண்டு கான்ட்ராக்டர்கள் தாங்கள்  நிர்ணயித்த தொகையில் டெண்டர் எடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, ரூ.500 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு டெண்டர் விட்டால் அந்த பணிகளை குறைவாக மதிப்பு நிர்ணயம் செய்து டெண்டர் எடுப்பதில்லை. மாறாக, அதே மதிப்பிலேயே கான்ட்ராக்ட் நிர்ணயம் செய்து டெண்டர் எடுக்கின்றனர்.  சில நேரங்களில் ஒரு பணிக்கு மதிப்பு குறைவாக இருப்பதாக கூறி டெண்டர் எடுக்க யாரும் முன்வருவதில்லை.இதனால், மீண்டும், மீண்டும் டெண்டர் விட வேண்டிய நிலை பொதுப்பணித்துறைக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு தான் கூடுதல் இழப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிதாக தொழில் தொடங்குவதற்கு உடனடியாக அனுமதி கிடைக்க இந்த அரசு ஏற்பாடு செய்யப்படும் என்று கூறி வரும் நிலையில் அவரது துறையிலேயே கான்ட்ராக்டர்களுக்கு புதிய உரிமம்  தருவது கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது பொதுப்பணித்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு புதிதாக தொழில் தொடங்க விரும்பும் கான்ட்ராக்டர்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் ெடண்டர் எடுக்க போட்டி ஏற்படும் சூழல் உருவாகும் என்று பொதுப்பணித்துறை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: