தமிழக நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படும் 571 இடங்கள் கண்டுபிடிப்பு: அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழக நெடுஞ்சாலைகளில் 571 இடங்களில் அதிளவு விபத்து ஏற்படும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் மீண்டும் விபத்து ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 63 ஆயிரம் கி.மீ. நீள சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் 500 மீட்டர் நீள சாலைப்பகுதிகளில் மூன்று ஆண்டுகளில் தீவிர காயங்களுடன் கூடிய விபத்து மற்றும் உயிர் சேதங்களை ஏற்படுத்திய 5  சாலை விபத்துக்களோ மற்றும் 10 உயிரிழப்புகளோ ஏற்படின் அந்த சாலை பகுதி விபத்து கரும்புள்ளி என்று கூறப்படுகிறது.

அந்த சாலை பகுதிகளில் விபத்து ஏற்படுத்துவதை தடுக்கும் பொருட்டு, குறுகிய பாலங்களை அகலப்படுத்துதல், வேகத்தடை அமைப்பது, தற்காலிக தடுப்புகள் அமைப்பது, அதிக வெளிச்சம் தரும் மின்விளக்குகள் பொறுத்துவது, எச்சரிக்கை  பலகை வைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி விபத்து கரும்புள்ளியாக நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாநில, மாவட்ட முக்கிய மற்றும் இதர சாலைகளில் கடந்த 2014 முதல் 2017 வரை 362  சாலைகள் விபத்து கரும்புள்ளிபகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2014ல் 169ம், 2015ல் 85ம், 2016ல் 64ம், 2017ல் 44 பகுதி விபத்து கரும்புள்ளியாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் 346 இடங்களில் இனி வருங்காலங்களில் விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதே போன்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் 209 இடங்கள் விபத்து கரும்புள்ளியாக கண்டறியப்பட்டுள்ளது. இதில், 25 இடங்களில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 24 இடங்களில்  அதற்கான பணிகள் நடந்து வருகிறது. 85 இடங்களில் தற்காலிக நடவடிக்கை எடுக்கும் பணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 13 இடங்களில் நிரந்தர மற்றும் நீண்ட கால திட்டம் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 11 இடங்களில் விபத்து தடுப்பு நடவடிக்கைக்கு திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 51 இடங்களில்  வேலை இன்னும் எடுக்கப்படவில்லை. அந்த இடங்களில் விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி கள் கூறினர்.

Related Stories: