பூண்டி ஏரி, கிருஷ்ணா கால்வாயில் ஆபத்தான குளியல்: உயிர்பலி ஏற்படும்முன் நடவடிக்கை அவசியம்

சென்னை: பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரும் கிருஷ்ணா கால்வாயில், சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் குளியல் போடுவதை போலீசார் தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து, ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் வழியாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி நீர்த்தேக்கத்துக்கு கிருஷ்ணா கால்வாய் வழியாக தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது.தற்போது அணையில் மொத்த உயரமான 35 அடியில் 28.50 அடி உயரம் தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கும் கிருஷ்ணா கால்வாய் வழியாக வினாடிக்கு 162 கன அடி தண்ணீர் ஏரிக்கு வந்துகொண்டு இருக்கிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் பூண்டிக்கு வந்து ஏரியின் ரம்யமான காட்சியை கண்டு ரசித்து செல்கின்றனர்.ஏரியை கண்டு ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் சிலர், கிருஷ்ணா கால்வாயில் வேகமாக வரும் தண்ணீரில் ஆனந்தமாக குளியல் போட்டு செல்கின்றனர். சிலர் தூண்டில் மற்றும் வலைகளை போட்டு மீன் பிடிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏரி மற்றும் கால்வாய் பகுதியில் யாரும் குளிக்கக்கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில் எச்சரிக்கை பலகை வைத்து இருந்தும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் குளித்து வருகின்றனர். பூண்டி ஏரிக்கு மேலும் தண்ணீர் வரத்து அதிகமானால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கிருஷ்ணா கால்வாய் மற்றும் ஏரியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதை போலீசார் தடை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories: