மெட்ரோ ரயில் நிலையத்தில் கார்களின் டயர்கள் திருட்டு: பயணிகள் அதிருப்தி

சென்னை: கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்ட கார்களின் டயர்கள் திருடப்பட்டு வரும் சம்பவம் பயணிகளிடைேய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  சென்னையில் மொத்தம் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் 17க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் பார்க்கிங் வசதி உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தின் பார்க்கிங் பகுதியில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு பயணி ஒருவர் தன்னுடைய காரை நிறுத்திவிட்டு சென்றிருந்தார்.மறுநாள் காலை 9 மணிக்கு அவர் வந்து பார்த்தபோது, பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரின் முன்பக்க டயர் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  இதுகுறித்து கோயம்பேடு மெட்ரோ நிலைய அதிகாரிகளிடம் அவர் புகார் அளித்துள்ளார். ஆனால், அதிகாரிகள் இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை, உங்களுடைய காரை நீங்கள் தான் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பயணி என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடியுள்ளார்.

மேலும், இதேபோன்ற சம்பவங்கள் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து மெட்ரோ ரயில் பயணிகள் கூறியதாவது: இரவு நேரங்களில் பார்க்கிங் பகுதிகளில் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படுவது இல்லை. சிசிடிவி கேமராக்கள் இல்லை. அப்படி கேமராக்கள் இருந்தாலும் அவை சரியாக வேலை செய்வதில்லை. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என அதிகாரிகள் அலட்சியமாக பதில் கூறுகிறார்கள். மாதம் தோறும் ₹.2,000 கொடுத்து பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தினால் எங்களின் வாகனங்களுக்கு எந்த பாதுகாப்பும் கொடுப்பதில்லை. எனவே, பார்க்கிங் பகுதிகளை சுற்றிலும் சிசிடிவி கேமராக்களை அமைக்க வேண்டும். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் தடுக்க நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Related Stories: