வியாசர்பாடி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் பைப்லைன் உடைந்து கழிவுநீர் தேக்கம்: நோய் பாதிப்பில் தவிக்கும் மக்கள்

பெரம்பூர்: வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் குப்பை குவியல் மற்றும் கழிவுநீர் தேங்குவதால் தொற்று நோய் பீதியில் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்னர். சென்னை மாநகராட்சி, 4வது மண்டலம், 37வது வார்டுக்கு உட்பட்ட சத்தியமூர்த்தி நகரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளன. இங்கு, ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், இந்த பகுதியில் முறையாக துப்புரவு பணி நடைபெறாததால் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. மேலும், பாதாள சாக்கடை அடைப்பு மற்றும் பைப்லைன் உடைப்பு காரணமாக கழிவுநீர் வெளியேறி, குடியிருப்புகளுக்கு இடையே உள்ள காலி இடத்தில் தேங்கியுள்ளது. இதில், குப்பை கொட்டப்படுவதால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது.குறிப்பாக, 63வது பிளாக் மற்றும் 64வது பிளாக் இடையே உள்ள இடத்தில் கழிவுநீருடன் குப்பை கலந்து சாக்கடையாக காட்சியளிக்கிறது.இவற்றில் கொசு உற்பத்தி அதிகரித்து இங்கு வசிக்கும் மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே, குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீர் மற்றும் குப்பை குவியலை அகற்ற வேண்டும், என மாநகராட்சி அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘குடியிருப்பு கட்டிடங்களில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பைப்லைன்கள் உடைந்துள்ளதால், கழிவுநீர் வெளியேறி குடியிருப்பு கட்டிடங்களுக்கு இடையில் உள்ள காலி இடத்தில் தேங்கி வருகிறது. பல ஆண்டாக தேங்கும் இந்த கழிவுநீருடன் குப்பை கலந்து சாக்கடை போல் உள்ளது. பல நேரங்களில் இந்த கழிவுநீர் சாலை வரை வழிந்தோடுகிறது. துப்புரவு பணியாளர்கள் இங்கு முறையாக பணியில் ஈடுபடுவது இல்லை. தற்போது, இந்த சாக்கடையில் கொசுக்கள் உற்பத்தியாகி பலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: