கொரோனா குறித்து மக்கள் பீதியடைய தேவையில்லை; முகக்கவசம் அணிய வேண்டிய நிலை தமிழகத்தில் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: கொரோனா குறித்து பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவில் உள்ள ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் பாதிப்பு படிப்படியாக சீனாவின் மற்ற பகுதிகளில் வேகமாக பரவியது. இந்த வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 97 நாடுகளில் பரவியுள்ளது. 1 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பு இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது. தற்போது வரை இந்தியாவில் 34 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதை தொடர்ந்து நாடு முழுவதும் விமான நிலையங்களில், ரயில் நிலையங்களில் பயணிகளிடம் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு வரும் பயணிகள் தீவிர பரிசோதனை செய்யப்படுகின்றனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பொறியாளர் ஒருவர் ஓமன் நாட்டில் இருந்து பிப்ரவரி 27ம் தேதி சென்னை வந்தவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள தனிவார்டில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னையில் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளித்தார். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளது; ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளார். டெக்ஸாசில் இருந்து வந்தவருக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. பரிசோதனைக்குப் பிறகே கொரோனா பாதிப்பு உள்ளதா என்பது தெரிய வரும். கொரோனா பாதித்த நபருடன் விமானத்திக் வந்தவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா பாதித்தவரின் உறவினர்கள் உள்பட மேலும் 28 பெரும் கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா குறித்து பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை; முகக்கவசம் அணிய வேண்டிய நிலை தமிழகத்தில் இல்லை. கொரோனா தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்.  சுகாதாரத்துறை தகவல்களை தவிர வேறு எதையும் மக்கள் நம்ப வேண்டாம். கொரோனா வைரஸ் பரவுவதை 100% தடுத்து வருகிறோம். கொரோனா வைரஸை தடுப்பதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். சீனாவில் கொரோனா பரவியதில் இருந்தே தனி வார்டுகள் அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவருகிறோம் எனவும் கூறினார்.

Related Stories: