அரசு தரப்பு சாட்சிகள் பல்டி அடித்தனர் என்பதற்காக குற்றவாளியை விடுதலை செய்ய முடியாது: கொலை முயற்சி வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் அதே பகுதியில் உள்ள சி.பி.சிற்றரசு தெருவில் கேரம் விளையாடிக்கொண்டிருந்தவர்களிடம் கடந்த 2003 ஜூன் 15ம் தேதி தகராறு செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட மோதலில் அவர் கேரம் விளையாடிக்கொண்டிருந்த  ஒருவரை கத்தியால் குத்தியுள்ளார். 2002ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அரும்பாக்கம் போலீசார், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் போதிய சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால்  ராதாகிருஷ்ணனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ₹10 ஆயிரம் அபராதமும் விதித்து 2004 ஆகஸ்டில் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கு நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராதாகிருஷ்ணன் தரப்பு வக்கீல், சம்பவம் நடந்த போது, ராதாகிருஷ்ணனுக்கு 18 வயது பூர்த்தியடையவில்லை. அவர் 1986ல் பிறந்தார். எனக்கூறி ராதாகிருஷ்ணனின் பிறப்பு சான்று, பள்ளி மாற்றுச் சான்றிதழ்களை தாக்கல் செய்து வாதிட்டார். மேலும், ராதாகிருஷ்ணன் சிறுவன் என்பதால் சாதாரண குற்ற வழக்கின் கீழ் விசாரிக்க முடியாது. இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் சாட்சியளித்த சம்பவத்தை கண்ணால் பார்த்த சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர். எனவே, ராதாகிருஷ்ணனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பு வருமாறு:

உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்த பின் பெறப்பட்டுள்ள பள்ளி மாற்றுச் சான்றை ஏற்க முடியாது. வழக்கில் அரசுத்தரப்பு சாட்சிகள் பல்டி அடித்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வக்கீல் அய்யப்பராஜ் ஆஜராகி, பல வழக்குகளில் அரசுத்தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளன. முதலில் சாட்சியளிக்கும்போது கூறியதற்கு மாறாக குறுக்கு விசாரணையில் சாட்சிகள் சாட்சியம் அளிப்பதால் குற்றம் நடைபெறவில்லை என்று கூறி விட முடியாது.ராதாகிருஷ்ணன் மீது 35 குற்ற வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ளன.  குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் சிறையில் அடைக்கப்பட்டவர். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அவருக்கு விசாரணை நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.இந்த வழக்கில் சாட்சிகள் பல்டி அடித்துள்ளதால் இதை அரிதான வழக்காக கருத முடியாது. சம்பவம் நடந்ததை பார்த்த சாட்சிகள் நீதிமன்றத்தில் சாட்சியளித்துள்ளதை மறுக்க முடியாது. எனவே, விசாரணை நீதிமன்றத்தின் தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று வாதிட்டுள்ளார். சாட்சிகள் பல்டி அடித்ததற்காக குற்றவாளியை விடுதலை செய்ய முடியாது. எனவே, ராதாகிருஷ்ணனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை இந்த நீதிமன்றம் 5 ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பளிக்கிறது. அவர் எஞ்சிய தண்டனைக்காலத்தை அனுபவிக்க வேண்டும். இந்த மேல் முறையீடு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: