தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வெளிப்படை தன்மையுடன் நடந்துள்ளது: உயர் நீதிமன்றத்தில் போலீஸ் பதில் மனு தாக்கல்

சென்னை: காவலர், தீயணைப்புப்படை வீரர் உள்ளிட்ட சீருடைப் பணியாளர்கள் பணிக்கான தேர்வு நடைமுறைகள் நியாயமாகவும், நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட்டுள்ளதால், தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி சி.பி.ஐ., விசாரணை கோரிய வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், 8,888 பணியிடங்களுக்கு நடத்திய தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதால், சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி திருவண்ணாமலையைச் சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட 15 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கில் பதில் தருமாறு தமிழக அரசுக்கும், சீருடை பணியாளர் தேர்வு வாரியத்திற்கும் உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் ஐ.ஜி., வித்யா ஜெயந்த் குல்கர்னி சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

பதில் மனுவில் கூறியிருப்பதாவது: சீருடைப் பணியாளர்கள் வாரியம் சார்பில் தமிழக காவல் துறையில் 8,888 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு மொத்தம் 3 லட்சத்து 22 ஆயிரத்து 662 பேர் விண்ணப்பித்தனர். இதற்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 47,752 பேர் உடற்தகுதித் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். தேர்வு எழுதிய 3 லட்சத்து 22 ஆயிரத்து 662 விண்ணப்பதாரர்களில், வேலூர் மாவட்டத்தில் மட்டும் 23 ஆயிரத்து 585 பேரும், விழுப்புரத்தில் 20 ஆயிரத்து 274 பேரும் தேர்வெழுதினர். அதிக எண்ணிக்கையில் தேர்வெழுதிய இந்த மையங்களில் இருந்து அதிக விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள 32 மையங்களில் ஐ.ஜி., டி.ஐ.ஜி., எஸ்.பி., போன்ற உயர் அதிகாரிகள் மேற்பார்வையில், தீவிர கண்காணிப்பின் கீழ் எந்த முறைகேடும் நடைபெறாத வகையில் தேர்வு நடத்தப்பட்டது.

முறைகேடுகள் நடந்ததாகக் கூறும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் தவறானவை. காவலர் தேர்வில் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டுள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டு முறையும் பின்பற்றப்பட்டுள்ளது. தற்காலிக தேர்வு பட்டியலில் இடம் பெற்றவர்களின் முழு விவரங்களும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறுவது தவறு.தேர்வு நடைமுறைகள் நியாயமாகவும், நேர்மையாகவும், விதிகளுக்கு உட்பட்டு, வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட்டுள்ளதால், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதி விசாரணையை வரும் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: