பழநியில் சித்த மருத்துவ உள்நோயாளி பிரிவிற்கு இடம் வழங்கியது வருவாய்த்துறை

பழநி: தினகரன் செய்தி எதிரொலியாக பழநி சித்த மருத்துவ உள்நோயாளிகள் பிரிவிற்கு வருவாய்த்துறையினர் இடம் வழங்கி உள்ளனர். அறுபடை  வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு கடந்த 1988ம் ஆண்டு சித்த மருத்துவக்கல்லூரி  துவங்கப்பட்டு, சுப்பிரமணியபுரம் சாலையில் உள்ள ரைஸ் மில் வளாகத்தில் கல்லூரி செயல்பட்டு வந்தது. புதிய கல்லூரி துவங்க சிவகிரிப்பட்டி  ஊராட்சிக்குட்பட்ட தட்டான்குளம் பகுதியில் 41 ஏக்கர் நிலம் விலைக்கு வாங்கப்பட்டது. இந்நிலையில் இக்கல்லூரி திடீரென சென்னைக்கு இடமாற்றம்  செய்யப்பட்டது. சித்தர் பூமியான பழநியில் சித்த மருத்துவமனை துவங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். பழநி  எம்எல்ஏவான ஐபி செந்தில்குமார் இதனை தனது தேர்தல் வாக்குறுதியாகவும் தெரிவித்தார்.

அதன்படி சட்டமன்றத்திலும் வலியுறுத்தி பேசினார். இதன் பயனாக ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பழநியில் சித்த  மருத்துவக்கல்லூரி துவக்கப்படுமென அறிவித்தார். சித்த மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட வேண்டுமென்றால் 60 உள்நோயாளிகளுடன் சித்த  மருத்துவமனை சுமார் 1 வருடமாவது செயல்பட்டிருக்க வேண்டும். இதன்படி பழநி தாலுகா அலுவலகத்தில் பயன்படுத்தப்படாமல் இருந்து பழைய  தாசில்தார் கட்டிடத்தை உள்நோயாளிகள் பிரிவாக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், 60 படுக்கைகள் அமைப்பதற்கு தாலுகா  அலுவலகத்தில் பயன்பாடின்றி கிடக்கும் மற்றொரு அறையும் தேவைப்படுகிறது. ஆனால், வருவாய்த்துறை அதிகாரிகள் அறையை வழங்காமல்  இழுத்தடித்து வந்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த பிப். 2ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பழநி தாலுகா அலுவலகத்தில் உள்ள  மற்றொரு கட்டிடமும் உள்நோயாளிகள் பிரிவிற்கு வருவாய்த்துறையினர் ஒதுக்கீடு செய்துள்ளனர். இந்த கட்டிடங்களை பராமரிப்பு பணி  மேற்கொள்வதற்காக ரூபாய் 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதியின் கீழ் பொதுப்பணித்துறையினர் தற்போது மராமத்து பணி செய்து  வருகின்றனர். கட்டிட பராமரிப்பு பணி சில நாட்களில் முடிவடைந்து விடும் சூழ்நிலையில் உள்ளதால், உள்நோயாளிகள் பிரிவிற்கு டாக்டர்கள்,  செவிலியர்கள், மருந்துகள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: