வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் இளநீர் விற்பனை விறுவிறுப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் நகரில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இளநீர் விற்பனை விறுவறுப்படைந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்தாண்டுகளை போல் இல்லாமல் நடப்பாண்டின் தொடக்கத்திலேயே அக்னி பகவானின் உக்கிரம் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. இதை எதிர்கொள்ள பொதுமக்கள் குளிர்ச்சியான பானங்களை பருகவும், குளிர்ச்சியான பழங்களை உண்ணவும் ஆர்வம் காட்டுவர்.

இதை உணர்ந்து மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முதல் வரவாக நகரின் பல இடங்களில் மலைபோல் குவிக்கப்பட்டு தர்பூசணி விற்பனை சூடு பறக்கிறது. இவை தவிர எலுமிச்சை சர்பத், வெள்ளரி பிஞ்சு விற்பனை விறுவிறுப்படைந்து காணப்பட்டது. இருப்பினும் இளநீருக்கு ஈடு எதுவுமில்லை என்ற பெயருண்டு.

அதன்படி பெரம்பலூர் நகரில் பல்வேறு இடங்களில் இளநீர் மலை போல் குவிக்கப்பட்டு விற்பனை விறுவிறுப்பு அடைந்துள்ளது. குறிப்பாக தற்போது வரை கேரள மாநிலத்தின் வரத்து இல்லாததால் உள்மாவாட்ட, அண்டை மாவட்ட இளநீர் வரத்து அதிகரித்துள்ளது. இவை குறைந்தது ரூ.20 முதல் ரூ.40 வரை விலை வைத்து விற்கப்படுகிறது. வெப்பத்தின் சூட்டை தணிக்க விரும்புவோர் காலையில் ஜாக்கிங், வாக்கிங் போகும்போது துவங்கி உச்சி வெயில் மண்டையை பிளக்கும் நேரம் வரை இளநீரை இருகரம் கூப்பி வரவேற்று பருகி பரவசமடைந்து வருகின்றனர்.

Related Stories: