யெஸ் வங்கியில் ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் பணமும் பத்திரமாக உள்ளது. வங்கி முதலீட்டாளர்கள் கவலைப்பட தேவையில்லை : நிர்மலா சீதாராமன் உறுதி

டெல்லி : யெஸ் வங்கியில் ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் பணமும் பத்திரமாக உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்களின் நலன் கருதியே யெஸ் வங்கி விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள  யெஸ் வங்கியின் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. யெஸ் வங்கியை நிர்வகிக்க எஸ்பிஐ முன்னாள் தலைமை நிதி அதிகாரி பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்ட நிலையில்,மறு உத்தரவு வரும் வரை யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள், மாதத்திற்கு ரூ.50 ஆயிரம் மட்டும் பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் எதிரொலியாக யெஸ் வங்கியின் பங்குகள் இன்று காலை கடும் சரிவை கண்டன. இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், யெஸ் வங்கி வாடிக்கையாளர்களின் பணம் பத்திரமாக உள்ளது என்று ரிசர்வ் வங்கி உத்தரவாதம் அளித்துள்ளதாக கூறினார்.ரிசர்வ் வங்கியுடன் தொடர்பில் உள்ளதாக கூறிய அவர், யெஸ் வங்கி முதலீட்டாளர்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் கேட்டுக் கொண்டார். யெஸ் வங்கியின் நிலை தற்போது, முன்னேற்றம் கண்டு உள்ளதாக கூறிய நிர்மலா சீதாராமன், விரைவில் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார்.இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு தகுதி இல்லை என்றும் நிர்மலா சீதாராமன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

Related Stories: