விரைவில் சென்னையில் 2வது சர்வதேச விமான நிலையம் : காஞ்சிபுரம் - அரக்கோணம் இடையே அமைந்துள்ள பரந்தூரில் அமைகிறது

சென்னை : சென்னையின் 2வது விமான நிலையம் காஞ்சிபுரம் - அரக்கோணம் இடையே அமைந்துள்ள பரந்தூரில் அமைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பரந்தூர் மற்றும் சென்னையை அடுத்த மாமண்டூர் ஆகிய இடங்களை தமிழக அரசு பரிந்துரை செய்தது. அதில் பரந்தூர் பகுதி விமான நிலையம் அமைப்பதற்கு ஏற்ற இடமாக உள்ளதாக இந்திய விமான போக்குவரத்து ஆணையம் கருதுகிறது. மீனம்பாக்கத்தில் இருந்து 62 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் பரந்தூரில் 4 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இந்த இடம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் மிகவும் அருகாமையில் உள்ளதால் விமான நிலையம் கட்டுவதற்காக முக்கிய இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர விமானம் சார்ந்த வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையிலான அலகுகள், பயிற்சி மையங்களும் அங்கு அமைக்கப்பட உள்ளன.பரந்தூரில் விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர், அங்கிருந்து சர்வதேச விமானங்களை இயக்குவதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதையடுத்து புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான பணிகள் இன்னும் சில வாரங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணிகள் விரைவில் தொடங்க வாய்ப்பு உள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் ஏற்கனவே சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வரும் நிலையில், விமான போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் சென்னைக்கு விமான சேவையை அதிகரிக்கவும் 2வது விமான நிலையத்தை திட்டமிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

பரந்தூர் விமான நிலையத்துக்கு பயணிகள் எளிதாக வந்து செல்லும் வகையிலான போக்குவரத்து திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, விமான நிலையம் முதல் பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரெயில் வழித்தடம் தொடக்கத்தில் திருமழிசை வரையிலும், அதன் பின்னர் பரந்தூர் வரையிலும் நீட்டிப்பு செய்யப்பட உள்ளது. உத்தேசிக்கப்பட்ட இந்த வழித்தடம் சென்டரல்-கோயம்பேடு-ஆலந்தூர் மெட்ரோ ரெயில் வழித்தடத்தை கோயம்பேட்டில் இணைக்கும். இது நகர்ப்புறத்தில் இருந்து விமான நிலையம் செல்ல உள்ள பயணிகளுக்கு தீர்வாக அமையும்.

Related Stories: