மார்ச் 25 உகாதி தினத்தன்று 26 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை: ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்

திருமலை: ஆந்திராவில் உகாதியன்று 26 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைகள் பட்டாவுடன் சேர்த்து வழங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. குண்டூர் மாவட்டம், வெலகம்புடியில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெகன் மோகன் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு   செய்தித்துறை  அமைச்சர் பேர்னி நானி   நிருபர்களிடம் கூறியதாவது: உகாதி தினத்தன்று (மார்ச் 25ம் தேதி) மாநிலம் முழுவதும் உள்ள  26 லட்சம் ஏழை மக்களுக்கு வீட்டுமனைகள் பட்டாவுடன் சேர்த்து வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வீட்டு மனைகளில் வீடு கட்டிக் கொள்ளவும் ஐந்து ஆண்டுகள் வரை வங்கியில் அடமானம் வைத்து கொள்ளவும்,  ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு விற்பனை செய்து கொள்வதற்கான உரிமையுடன் கூடிய பட்டா வழங்கப்படும்.

இதற்காக தாசில்தார்களுக்கும் இணை பதிவாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படும். வீட்டு மனைக்காக 43,141 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.  இதில் 26,976 ஏக்கர் அரசு நிலமும், 16,164 ஏக்கர் தனியார் நிலத்தை அரசு விலைக்கு வாங்கி உள்ளது. போர்கால அடிப்படையில் இந்த இடங்கள் லேஅவுட் அமைத்து வழங்கப்படும். இந்த இடத்திற்கு   ஒய்எஸ்ஆர் ஜெகன் அண்ணா காலனிகள் என்று பெயரிடப்படும். ஓங்கோலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை நீர்பாசனத்துறைக்கே மீண்டும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போக்காப்புரம் விமான நிலையம் அமைக்கும் பணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

சென்சஸ் எடுக்கும் பணி நிறுத்தி வைக்க முடிவு:

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் 2010ம் ஆண்டு எவ்வாறு நடைபெற்றதோ அதுபோன்று செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய ஆந்திர அமைச்சரவை முடிவு செய்துள்ளது.  அதுவரை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நிறுத்தி வைக்கவும் இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

Related Stories: