உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து தமிழகத்தில் 7 நாட்களாக நடைபெற்று வந்த கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

சென்னை: கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. உரிமத்தை புதுப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, கடந்த 7 நாட்களாக நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்குவந்தது

சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் ஆலைகளுக்கு சீல்

தமிழகத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அரசு சார்பில் நிலத்தடி நீர் குறைவாக உள்ள இடங்களில் நிலத்தடி நீர் எடுக்க தமிழக அரசு தடை விதித்துள்ளதாக கூறியுள்ளது. மேலும், நிலத்தடி நீரை சட்டவிரோதமாக உறிஞ்சும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டது.அதன் அடிப்படையில் தமிழக அரசு தொடர்ந்து குடிநீர் ஆலைகளை சோதனை செய்து மூடி வருகிறது.

 7 நாட்களாக நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் சார்பில் கடந்த பிப்ரவரி 27ம் தேதி மாலை 6 மணி முதல் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இதனால், தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 1,689 கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டன. தினமும் விற்பனை செய்யக்கூடிய 20 லட்சம் குடிநீர் கேன்கள் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. கேன் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டதால் விற்பனையாளர்கள் பலர் கேன்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று வந்தனர். கேன் குடிநீர் உற்பத்தி கடந்த 6 நாட்களாக முடங்கியுள்ளதால், கேன் தண்ணீருக்கு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடும் தட்டுப்பாடு நிலவியது.

உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்த நிலையில், குடிநீர் ஆலைகள் உரிமம் கோரி மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும், உரிமம் கோரி விண்ணப்பித்தால்  15 நாட்களுக்குள் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சட்டவிரோதமாக இயங்கிய குடிநீர் ஆலைகளை மூடக்கோரிய சிவமுத்து என்பவரது வழக்கு விசாரணையில் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கேன் குடிநீர் ஆலைகளின் சங்க தலைவர் முரளி  பேட்டி

சீல் வைக்கப்பட்ட ஆலைகள் விண்ணப்பித்தால் 15 நாளில் பரிசீலிக்கும்படி ஐகோர்ட் உத்தரவிட்டதால், 7 நாட்களாக நீடித்த கேன் குடிநீர் ஆலைகளின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இத்தகவைலை கேன் குடிநீர் ஆலைகளின் சங்க தலைவர் முரளி தெரிவித்தார்.மேலும், சீல் வைக்கப்பட்ட குடிநீர் ஆலைகள் அனுமதி கோரி விரைவில் விண்ணப்பிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.தொடர்ந்து பேசிய முரளி, உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகவும் கடந்த 7 நாட்களாக அனுமதி பெறாத குடிநீர் விநியோகித்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறினார்.

Related Stories: