நிலத்தடி நீர் சட்டவிரோதமாக திருடப்படுகிறதா என்பதை கண்காணிக்க வழக்கறிஞர்கள் குழுவை மாவட்ட நிர்வாகம் அமைக்க வேண்டும் : உயர்நீதிமன்றம்

சென்னை: மூடப்பட்ட  குடிநீர் உற்பத்தி ஆலைகள் உரிமம் கோரி புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோதமாக இயங்கிய குடிநீர் ஆலைகளை மூடக்கோரிய சிவமுத்து என்பவரது வழக்கு விசாரணையில் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் மூடப்பட்ட  குடிநீர் ஆலைகள் விண்ணப்பித்தால் உரிமம் தருவது பற்றி 15 நாளில் அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பத்தோடு 50 ஆயிரம் ரூபாய் செலுத்த உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், சட்ட விரோத நிறுவனங்களை கண்காணிக்க மாவட்டந்தோறும 2 மூத்த வழக்கறிஞர்கள் கொண்ட கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் நிலத்தடி நீரின் அளவை மீண்டும் அளவிட்டு மார்ச் 30ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அத்துடன் தண்ணீரை திருடும் தொழிற்சாலைகள் மூடி சீல் வைக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் இல்லாமல் இயங்கும் கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால், தமிழகம் முழுவதும் மேற்படி உரிமம் இல்லாத குடிநீர் ஆலைகள் தொடர்ந்து ‘சீல்’ வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக கேன் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுஉள்ளது.

உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை

இந்நிலையில், சட்டவிரோதமாக இயங்கிய குடிநீர் ஆலைகளை மூடக்கோரிய சிவமுத்து என்பவரது வழக்கு  நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூடியது குறித்து அறிக்கை தாக்கல் செய்தார். அதில் தமிழகம் முழுவதும் மொத்தம் 552 குடிநீர் ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், குடிநீர் உற்பத்தியாளர்கள் போராட்டம் மூலமாக நீதிமன்றத்திற்கு நெருக்கடி கொடுக்கலாம் என  நினைத்தால் அது தவறு.கடந்த கால சட்டவிரோத செயல்களுக்கு உரிய விலையைக் கொடுக்க வேண்டாமா ?.நீர் எடுக்கும் அளவிற்கு ஏற்ப குடிநீர் நிறுவனங்களிடம் ஏன் கட்டணம் வசூலிக்க கூடாது ?.மாநிலத்தின் இயற்கை வளமான தண்ணீரை இலவசமாக எடுக்க அனுமதிப்பது ஆச்சரியம் அளிக்கிறது.அனுமதியின்றி செயல்படக்கூடிய குடிநீர் ஆலைகளை சீல் வைத்ததை ஆய்வு செய்வதற்கு சுதந்திரமான ஒரு குழுவை அமைக்கக் வேண்டும் என்றனர். இதையடுத்து, மூடப்பட்ட ஆலைகளை மீண்டும் திறக்க அனுமதிப்பது தொடர்பாக இன்று உத்தரவு பிறப்பிப்பதாக கூறிய நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related Stories: