கோவளம் வடிநிலப்பகுதியில் மழைநீர் வடிகால் திட்டத்திற்கு ஜெர்மனியின் கேஎப்டபிள்யூ வங்கி 1700 கோடி நிதியுதவி: ஒப்பந்தம் கையெழுத்தானது

சென்னை: கோவளம் வடிநிலப்பகுதியில் மழைநீர் வடிகால் திட்டத்திற்கு ஜெர்மனியின் கேஎப்டபிள்யூ வங்கி 1700 கோடி நிதியுதவி வழங்குகிறது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.  சென்னை மாநகராட்சி பகுதியில் அடையாறு, கூவம், கோவளம், கொசஸ்தலையாறு உள்ளிட்ட வடிநிலப்பகுதிகள் உள்ளது. இவற்றில் அடையாறு மற்றும் கூவம் வடிநிலப்பகுதிகளில் உலக வங்கி நிதி உதவியுடன்ன ₹1261 கோடியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் கட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கோவளம் வடிநிலப்பகுதியில் 470 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் கட்டுவதற்கு ஜெர்மனியைச் சேர்ந்த கேஎப்டபிள்யூ வங்கியிடம் இருந்து நிதி உதவி பெற முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டமானது எம்1, எம்2 மற்றும் எம்3 என்று மூன்று பகுதியாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.  பாலவாக்கம், கொட்டிவாக்கம், சோழிங்கநல்லூர் பகுதிகளை உள்ளடக்கிய 52 கிலோ மீட்டர் நீளத்திற்கு விரிவான திட்டம் அறிக்கை தயார் செய்யப்பட்டு டெண்டர் கோரப்பட்டது.

இதன்பிறகு டெண்டர் இறுதி செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது. இந்நிலையில் எம்1 மற்றும் எம்2 திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெற்றுவருகிறது. இந்தப் பணிகள் 6 மாதத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கான நிதி உதவி அளிப்பது தொடர்பான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங் மற்றும் கேஎப்டபிள்யூ வங்கி அதிகாரிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், பணிகள் துறை துணை ஆணையர் குமரவேல் பாண்டியன், தலைமை பொறியாளர் நந்தக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதைத்தவிர்த்து கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில் ₹2518 கோடியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் கட்டும் திட்டத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி நிதியை பெறவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கை வங்கிக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: