தமிழக கோயில்களை மத்திய தொல்லியல்துறை கையகப்படுத்துவது தமிழக மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் செயல்: பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: தமிழக கோயில்களை மத்திய தொல்லியல்துறை கையகப்படுத்துவதை தடுக்க வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக கோயில்களை மத்திய தொல்லியல்துறை கட்டுப்படுத்துவது ஏன்? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள பழமை வாய்ந்த கோயில்களின் நிர்வாகத்தை மத்திய தொல்லியல்துறைக்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதன்படி தமிழகத்தில் உள்ள பல கோயில்களில் பராமரிப்பும், நிர்வாகமும் மத்திய தொல்லியல்த்துறைக்கு மாற்றப்படுவது தமிழக மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் செயல் என்றும் கூறியுள்ளார். தமிழகத்தில் பாரம்பரிய பெருமைமிக்க கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறையால் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதாக அவர், தெரிவித்துள்ளார்.

மேலும், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை என்ன காரணத்திற்காக மத்திய தொல்லியல்துறையிடம் தாரைவார்க்க மத்திய அரசு துடிக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ள ராமதாஸ், தமிழக கோயில்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றை மத்திய தொல்லியத்துறைக்கு மாற்ற வேண்டும் என்பது சம்பந்தப்பட்ட கோயில்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் முயற்சி என்பதை தவிர வேறொன்றுமில்லை. இத்தகைய கலாச்சார படையெடுப்பை அனுமதிக்க முடியாது என்றும் ராமதாஸ் கூறியுள்ளார். இந்த தகவலை வெளியிட்டுள்ள மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல், அதற்கான காரணங்களையும் தெரிவிக்கவில்லை. மேலும் வழிபாட்டில் உள்ள கோயில்களை மத்திய தொல்லியல்துறையிடம் ஒப்படைப்பது என்பது அக்கோயிலை மூடுவதற்கு சமம் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: