மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காலம், ஜன., 31ல் முடிந்தது. இதையடுத்து, ஒரு மாதமாக மழையின்றி, மிதமான தட்பவெப்ப நிலை நிலவுகிறது.மலைப் பகுதிகளில் மட்டும், இரவு நேரங்களில், லேசான பனி மூட்டம் காணப்படுகிறது. இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன், சில இடங்களில் மட்டும், மழை பெய்த நிலையில், மீண்டும் பிப்ரவரி 29ம் தேதி முதல், சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் ஓரிரு இடஙகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் ஏனைய பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நீடிக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 32 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் கெட்டி பகுதிகளில் தலை 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல், நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த மார்ச் 1 மற்றும் 2ம் தேதிகளில் இயல்பாக பெய்ய வேண்டிய மழையளவை விட நீலகிரியில் 153% அதிகமாகப் பெய்துள்ள நிலையில், மற்ற பகுதிகளில் ஒரு சதவீத மழை கூட பதிவாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Related Stories: