சென்னையில் உள்ள 27 ஆயிரம் கட்டிடங்களுக்கு பட்டா இல்லை: விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முடிவு

சென்னை: சென்னையில் உள்ள 27  ஆயிரம் கட்டிடங்களுக்கு பட்டா இல்லை என்ற அதிர்ச்சி தகவல் மாவட்ட நிர்வாகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னையில் லட்சக்கணக்கான கட்டிடங்கள் உள்ளது. இந்த கட்டிங்களுக்கு  சென்னை மாநகராட்சி மட்டும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்திடம் அனுமதி பெற வேண்டும். இதைத்தவிர்த்து கட்டிடம் கட்டப்படவுள்ள நிலங்களுக்கான பட்டாவை  சென்னை மாவட்ட நிர்வாகம் அளிக்கும். இந்நிலையில் சென்னையில் முறையான பட்டா இல்லாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்து கொண்டே இருந்தது. மேலும் சென்னையில் 50 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருபவர்கள் பட்டா கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியது.

இதன் அடிப்படையில் சென்னை மாவட்ட நிர்வாகம் நடத்திய ஆய்வில் சென்னையில் 27 ஆயிரத்திற்கு மேற்பட்ட கட்டிடங்கள் பட்டா இல்லாத நிலங்களில் கட்டியிருப்பது தெரியவந்துள்ளது. இவற்றில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நீர் நிலைகளில் இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக பள்ளிக்கரணை மற்றும் மடிப்பாக்கம் ஆகிய இடங்களில் அதிக அளவில் நீர் நிலைகளில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் இவர்களுக்கு பட்டா வழங்கும் பணியை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நத்தம் புறம்போக்கு இடங்களில் உள்ளவர்களுக்கு தற்காலிக பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் இவர்கள் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி உதவிகளை பெற வங்கி கணக்கு தொடங்கும் பணியை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Related Stories: