மாநிலங்களவை எம்பி சீட் கேட்டு வரும் நிலையில் தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் முதல்வர் எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு

சென்னை: முதல்வர் எடப்பாடியை, தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவ் திடீரென சந்தித்து பேசினார். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை பதவிக்கான தேர்தல் வருகிற 26ம் தேதி நடக்கிறது. இதில் திமுக, அதிமுக சார்பில் தலா 3 இடங்கள் கிடைக்கும். அதிமுக சார்பில் மாநிலங்களவை பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது. அதிமுகவின் முன்னணி தலைவர்கள் மாநிலங்களவை பதவி கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக கூட்டணி ஒப்பந்தப்படி தங்களுக்கு ஒரு சீட் வழங்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளது. சீட் வழங்காத பட்சத்தில் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதே நேரத்தில் மத்தியில் தனி மெஜாரிட்டியில் ஆட்சியில் உள்ளோம். தமிழகத்தில் எங்களுடைய தயவில்தான் ஆட்சி நீடிக்கிறது.

தமிழகத்தில் எங்களுக்கு எம்பியோ, எம்எல்ஏக்களோ கிடையாது. எனவே, மாநிலங்களவை எம்பி பதவி வழங்கினால் எளிதாக மத்திய அமைச்சாராகி விடுவோம். எனவே, எங்களுக்கு எம்பி பதவி வழங்க வேண்டும் என்று பாஜவும் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளது. மேலும் அதிமுக கூட்டணியில் உள்ள தமாகாவும் எம்பி சீட் கேட்டு வருகிறது. இதனால், அதிமுகவில் யாருக்கு எம்பி சீட் வழங்குவது என்பதில் கடும் குழப்பம் நீடித்து வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் முதரளிதர்ராவ், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு திடீரென சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது. சந்திப்பின் போது இரு தலைவர்களும் என்ன பேசினார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பரப்பப்படும் தவறான தகவலை தடுத்து நிறுத்த வேண்டும், தவறான தகவல்களை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், போராட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என்று முரளிதர்ராவ் வலியுறுத்தியதாக பாஜ வட்டாரத்தில் கூறப்படுகிறது. மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜ மேலிட பொறுப்பாளர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Stories: