ராஜிவ் காந்தி நினைவிடத்தில் அவதூறு டிக்டாக் வீடியோ பதிவிட்ட வாலிபர்: ஸ்ரீபெரும்புதூர் போலீசில் காங்கிரஸ் புகார்

சென்னை: ராஜிவ் காந்தி நினைவிடத்தில் அவதூறு டிக்டாக் வீடியோ பதிவிட்ட வாலிபரை கைது செய்ய வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சியினர் ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி நினைவிடம் உள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ் காந்தி நினைவிடம் பாதுகாப்பு பணி மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பொதுமக்கள் ராஜிவ் காந்தி நினைவிடத்திற்கு வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

மேலும் பலர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர்.தற்போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒருவர் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பேசிய வசனத்துடன் டிக்டாக் செயலியில் வீடியோவை பதிவிட்டுள்ளார். இது வைரலாக பரவிவருகிறது.

இதனால் காங்கிரஸ் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் கட்சியினர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூறுகையில், ‘‘மறைந்த  முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி ஒரு மாபெரும் தலைவராக விளங்கியவர். அவரது நினைவிடத்தை நாங்கள் கோயில் போல பராமரித்து வருகிறோம். தற்போது அவரை இழிவுபடுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இளைஞரணி மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன், சீமான் பேசியதுபோல் நினைவிடத்தில் இழிவாக பேசி டிக் டாக்கில் பதிவிட்டுள்ளார், இது கண்டனத்திற்குரியது. எனவே அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ளோம்’’ என்றனர்.

Related Stories: