மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மேற்கு வங்கத்தில் பாஜ ஆட்சி அமையும்: உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

கொல்கத்தா: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மேற்கு வங்க மாநிலத்தில் பாஜ ஆட்சி அமையும்,’ என்று மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா தெரிவித்துள்ளார். மத்திய அரசின் தேசிய குடியுரிமை சட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கு பாராட்டு தெரிவித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு கொல்கத்தாவில் உள்ள ஷாகித் மினார் மைதானத்தில் ேநற்று பிரமாண்ட பாராட்டு விழா நடைபெற்றது. இதில், அமித்ஷா பேசியதாவது:

தீவிரவாதத்தை அரசு ஒருபோதும் சகித்து கொள்ளாது. பிரதமர் மோடி தலைமையின் கீழ், வெளியுறவு கொள்கைகளில் இருந்து மாறுபட்ட, ஆக்கப்பூர்வமான பாதுகாப்பு கொள்கையில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால், சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தும் முன்னணி நாடுகளான அமெரிக்கா, இஸ்ரேல் வரிசையில் இந்தியா இடம் பிடித்துள்ளது.

ராணுவ வீரர்கள் ஓராண்டில் குறைந்தபட்சம் 100 நாட்களாவது தங்கள் குடும்பத்தினருடன் இருக்கும் வகையில், புதிய கொள்கையை உருவாக்குவதில் மத்திய அரசு முனைப்புடன் உள்ளது. இந்திய ராணுவத்தை உலகின் தலைசிறந்த ராணுவமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், அகதிகளையும், சிறுபான்மையினரையும் தவறாக வழி நடத்துகின்றன, அச்சுறுத்தி வருகின்றன. குடியுரிமை திருத்த சட்டத்தால், சிறுபான்மையினர் ஒவ்வொருவருக்கும் குடியுரிமை வழங்கப்படுமே தவிர பறிக்கப்படாது. மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலத்துடன் பாஜ. ஆட்சி அமைக்கும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

Related Stories: