கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி மலேசிய மணல் வருவதில் சிக்கல்: கட்டுமான பணிகள் முடங்கும் அபாயம்

சென்னை: கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக மலேசியாவில் இருந்து மணல் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டுமான பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆற்றுமணல் தட்டுப்பாட்டை போக்க மலேசிய நாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்படுகிறது. ஹைதராபாத்தை சேர்ந்த இனோ ரிதம் எனர்ஜி லிமிடெட் என்கிற ஒப்பந்த நிறுவனம் தற்போது அப்பணியை செய்து வருகிறது. அதன்படி சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகம், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் மணல் இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது.

முதற்கட்டமாக சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் 8 முறை கப்பல்கள் மூலம் மணல் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு விட்டது. தற்போது காட்டுபள்ளியில் உள்ள அதானி துறைமுகத்தில் தான் மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு மணல் விற்பனை முடியும் தருவாயில் உள்ளது.இதை தொடர்ந்து மீண்டும் மலேசியாவில் இருந்து எண்ணூர் துறைமுகத்துக்கு மணலை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக, ஒப்பந்த நிறுவனம் சார்பில் மணல் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனா, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், மலேசியாவில் இருந்து கப்பலில் மணல் ஏற்றுமதி செய்து, துறைமுகத்தில் இருந்து வெளியே கப்பலை கொண்டு வருவதற்கு அந்த நாட்டு அரசு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், துறைமுகம் நிர்வாகம் சார்பில் தடையில்லா சான்று (என்ஓசி) தர தாமதம் செய்து வருகிறது. இதனால், மார்ச் இறுதியில் தான் தமிழகத்துக்கு மணல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சென்னை மாநகரில் வெளிநாட்டு மணலை நம்பி தான் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மலேசியாவில் இருந்து மணல் கொண்டு வருவதில் காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் கட்டுமான பணிகள் முடங்க வாய்ப்புள்ளது என கட்டுமான நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.

Related Stories: