சென்னை புறநகர் பகுதிகளில் விதிமீறி செயல்படும் டாஸ்மாக் பார்கள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ஆவடி: சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்கள் விதிமீறி செயல்படுவதாகவும், இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை எனவும் குடிமகன்கள் குற்றம்சாட்டி உள்ளனர். சென்னை புறநகர் பகுதிகளான அம்பத்தூர், கொரட்டூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருமுல்லைவாயல், ஆவடி, பட்டாபிராம், ஆவடி டேங்க் பேக்டரி, முத்தாபுதுப்பேட்டை, திருநின்றவூர், பூந்தமல்லி, போரூர், மாங்காடு, குன்றத்தூர், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு மாதந்தோறும் பல கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்த டாஸ்மாக் கடைகளை ஒட்டி செயல்படும் பார்கள் பராமரிப்பின்றி அசுத்தமாகவும் தொற்று நோய் பரப்பும் நிலையிலும் உள்ளன.   தமிழ்நாடு மக்கள் நலவாழ்வு சட்ட பிரிவு 41, 44, 107, 108, 133ன் கீழ் நகராட்சி தரப்பில் 15குறைபாடுகளின் அடிப்படையில் பார்கள் மீது சுகாதார பிரிவு நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி கீழ்க்கண்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

  பார் நடத்த நகராட்சியிடம் உரிமை பெறுதல், போதிய காற்றோட்டம், மின்சாரம், கழிப்பிடம், பார் கட்டிட உறுதி சான்று, மிக குறுகிய வாசல் இல்லாமல் அவசர கால வழிகளும், தீ தடுப்பு பாதுகாப்பு முறை, பார் பணியாளர்களுக்கு அடையாள அட்டை, மருத்துவ தகுதிச்சான்று, கழிவு பாட்டில்கள், அட்டைப் பெட்டிகள், கழிவு உணவுகள் ஆங்காங்கே கொட்டக் கூடாது, துர்நாற்றம் மற்றும் தொற்று நோய் பரவும் நிலையில் சுகாதார கேடான பகுதியாக இருக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.   மேலும் உணவுப் பொருட்களை ஈ மொய்க்காமல் மூடப்பட்டிருக்க வேண்டும். பாதுகாப்பான குடிநீர், கை கழுவ வாஷ்பேஷன், கழிவுநீர் செல்ல வழி, போதிய இடவசதி, பார் கழிவுகள் நேரடியாக மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சி குப்பை கிடங்கு அல்லது வாகனத்தில் சேர்க்கவேண்டும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என குறிப்பிட்டுள்ளது.   இவை முறையாக பின்பற்றப்படுகிறதா என சுகாதார துறையினர் பார்களில் ஆய்வு நடத்த வேண்டும். குறைகளை சரிசெய்யாத பார்கள் மீது தமிழ்நாடு மக்கள் நலவாழ்வு சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்களில் எதையும் முறையாக கடைபிடிக்கவில்லை. பார்களை மாதத்தில் ஒரு முறை கூட அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் சுகாதாரமற்ற உணவு பொருட்களையும் பார்களில் பயன்படுத்துகின்றனர்.

பெரும்பாலான பார்கள் சுகாதாரமற்ற நிலையில் அருவருக்கத்தக்க நிலையில் காணப்படுகின்றன. 95சதவீத பார்களில் கழிப்பிட வசதி இல்லை. உணவு பொருள், தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றை பார்களுக்கு நிர்ணயித்த விலையை விட பல மடங்கு அதிகமாக விற்கின்றனர்.  இதுகுறித்து பார்களில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டுவதாக கூறப்படுகிறது. மேலும் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களில் அரசு நிர்ணயித்த விலையைவிட ரூ.10 முதல் ரூ.40 வரை கூடுதலாக வசூலிக்கின்றனர். இதையும் சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மாமூல் வாழ்க்கையை கடைபிடிக்கின்றனர். எனவே, அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி டாஸ்மாக்பார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என குடிமகன்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: