தீயணைப்பு நிலையத்தில் ஆய்வு மாதவரம் பகுதியில் இருந்து திருவள்ளூருக்கு சைக்கிளில் வந்த தீயணைப்பு துறை டிஜிபி

சென்னை: தீயணைப்பு துறை இயக்குனர் சைலேந்திரபாபு, நேற்று மாலை மாதவரத்தில் இருந்து சைக்கிளில் புறப்பட்டு திருவள்ளூர் தீயணைப்பு நிலையத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். தீவிபத்து மற்றும் மீட்பு பணிகள் காலங்களில்  ஊர்தியினை விரைவாக செலுத்துவது மற்றும் பணிபுரிவது குறித்து பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். மாதவரத்தில் இருந்து நேற்று சைக்கிளில் புறப்பட்ட தீயணைப்பு துறை இயக்குனர் சைலேந்திரபாபு, மாலை திருவள்ளூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் தீயணைப்பு நிலையத்தில் பயன்படுத்தப்படும் நவீன கருவிகளை பார்வையிட்டார். அவற்றின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

பிறகு தீயணைப்பு நிலைய வீரர்கள் மத்தியில் அவர் பேசும்போது, ‘’தீயணைப்பு நிலைய வீரர்கள் 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும்.  பொதுமக்களுடன் இணைந்து சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்.  கடினமான பணிச்சுமை இருப்பதால் உங்களின் உடல் நலனை பேணி காப்பது அவசியம்.  இதற்காக நீங்கள் தினமும் உடற்பயிற்சி விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடலாம்,’’ என்றார். மேலும் நிலையத்தில் பெறப்படும் தொழிற்சாலை தீவிபத்து மற்றும் குப்பை தீவிபத்துகளை எதிர்கொள்வது குறித்து அறிவியல்  பூர்வமான கருத்துளை வழங்கினார். தொடர்ந்து, நிலையத்தில் உள்ள சிறப்பு உபகரணங்களை இயக்கி பரிசோதித்து, அதன் செயல் விளக்கம் மேற்கொண்டு, அதன் செயல்திறனை ஆய்வு செய்தார். இந்த வருகையின் போது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலர், உதவி மாவட்ட அலுவலர் பாஸ்கர், நிலைய அலுவலர் செல்வராஜ் மற்றும் பணியாளர்கள்  உடனிருந்தனர்.

Related Stories: