ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியில் நடக்கும் பணிகளில் மெத்தனம்: சுற்றுலாத்துறை திட்ட மேலாண்மை அலகு பொதுமேலாளர் திடீரென விடுவிப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியில் நடக்கும் பணிகளை முடிப்பதில் மெத்தனம் காட்டிய சுற்றுலாத்துறை திட்ட மேலாண்மை அலகு பொது மேலாளரை திடீரென அப்பொறுப்பில் இருந்து விடுவித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் சுற்றுலா தலங்களில் ஓய்வுக்கூடங்கள், கழிவறைகள், அணுகு சாலைகள், உடை மாற்றும் அறைகள், வாகன நிறுத்தும் இடங்கள், குடிநீர் வசதி, மின் விளக்கு வசதி, வழிகாட்டி பலகைகள் நிறுவுதல் போன்றவை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் சுற்றுலா தலங்களில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், கடந்தாண்டு ஜூன் மாதம் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி மூலம்300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியை கொண்டு காஞ்சிபுரம், பெரும்புதூர், ஒகேனக்கல், திருச்சி, சிதம்பரம், ஆலங்குடி உள்ளிட்ட பல இடங்களில் சுற்றுலா உட்கட்டமைப்பு பணிகளுக்கான டெண்டர் விட்டதில் குளறுபடி, பில் செட்டில் செய்வதில் தாமதம் உள்ளிட்ட பல் ேவறு காரணங்களால் தற்போது வரை 30 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் ஆசிய வளர்ச்சி வங்கி பணிகளை முடிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான இடங்களில் பணிகள் தொடங்கவில்லை. இதனால், இந்த திட்டப்பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திட்டபணிகளில் உள்ள மெத்தனபோக்கை காரணம் காட்டி, ஆசிய வளர்ச்சி வங்கி திட்ட மேலாண்மை அலகு தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக பொது மேலாளர் செல்வம் அந்த பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பொதுப்பணித்துறை முன்னாள் கண்காணிப்பு பொறியாளர் ஜோதி மணி தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக பொது மேலாளராக நியமனம் செய்து சுற்றுலாத்துறை செயலாளர் அசோக் டாங்ரே உத்தரவிட்டுள்ளார். இது அந்த துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: